Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரு விநோதமான தேர்வு!

    ‘இதுவரை தேர்வில் ஆசிரியர்கள்தான் கேள்வி கேட்டார்கள். நீங்களே கேள்விகளை தேர்ந்தெடுக்கும் புதிய தேர்வு முறையை உங்கள் பள்ளியில் அறிமுகப்படுத்தப் போகிறேன்.’

ஒரு பள்ளி மாணவர்களிடம் இப்படி பேச்சை ஆரம்பித்ததும் கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது.

ஆனால் சில நிபந்தனைகள். அபத்தமான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் கிடையாது. கேள்விகள் கடினமாக இருந்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். எளிதான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் குறையும். ஆக இந்த தேர்வில் கேள்விகளுக்கும் மதிப்பெண் உண்டு.’
கனத்த மவுனம் நிலவியது.

நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். தேர்ந்தெடுத்த கேள்விகளுக்கு தப்பான பதில் எழுதினால் மதிப்பெண்களே கிடையாது.’
சோகமான மவுனம்.

இப்போது சொல்லுங்கள். இந்த புதிய தேர்வுமுறை வேண்டுமா
வேண்டவே வேண்டாம் என்று மாணவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

சரி ஒரு சலுகை தருகிறேன். தேர்வுக்கு பாடப்புத்தகங்களை கொண்டு வந்து பார்த்து எழுதலாம். அடுத்தவர்களை பார்த்தும் எழுதலாம்.’
பாதி மாணவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். மீதி மாணவர்கள் முகம் கவலையில் தோய்ந்திருந்தது.

சற்று துணிச்சலான மாணவன் எழுந்தான்.
சார். டீச்சரே கேள்விகள் தேர்ந்தெடுக்கட்டும் சார். நாங்க பழைய மாதிரியே பரீட்சை எழுதறோம் சார். நீங்க சொல்றது கொஞ்சம் பயமா இருக்கு.’
எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

பரீட்சை எழுத எவ்வளவு நேரம் கொடுப்பீங்க சார்?’
வாழ்க்கை முழுசும் எழுதிக்கிட்டே இருக்கலாம். பதில் எழுத எழுத மார்க் வந்துக்கிட்டேயிருக்கும்.’

ஒண்ணுமே புரியலையே சார்.’ நீண்ட விளக்கம் ஒன்றை சொல்ல ஆரம்பித்தேன்.

வாழ்க்கை எனும் தேர்வு இந்த முறையில்தான் நடக்கிறது. அந்த தேர்வை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் கேள்வியை நாமே தேர்ந்தெடுக்கிறோம். உதாரணமாக இளம்வயதில் படிப்பதா இல்லை ஊர்சுற்றுவதா என்பதில் ஒன்றை தேர்ந்தெடுக்கிறோம். ஊர்சுற்றுவது என்பது எளிமையான கேள்வி. அதற்கு குறைவாகவே மதிப்பெண்கள் கிடைக்கும். படிப்பது என்பது கடினமான கேள்வி. அதில் நாம் படும் கஷ்டத்துக்கு ஏற்ப மதிப்பெண்கள் கிடைக்கும்.

என்ன படிப்பது என்பது அடுத்த கேள்வி. மருத்துவம். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்பது கஷ்டமான கேள்வி. அதற்கு அதிக மதிப்பும், மதிப்பெண்களும் உண்டு.

அதேபோல் என்ன வேலை என்பதும் நீங்களாக தேர்ந்தெடுக்கும் கேள்விதான். எனக்கு தெரிந்த ஒருவர் கல்லுõரியில் படிக்கும்போது ‘ஜாலியாக படிக்க வேண்டும் என தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை படித்தார். ஒரு தினசரி பத்திரிகையில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். அதுவும் சுலபமான கேள்விதான். திடீரென்று அவருக்கு உத்வேகம் வந்து தமிழிலேயே ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார். இன்று ஒடிசா மாநிலத்தில் பெரிய பதவியில் இருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த கடினமான கேள்விக்கு வாழ்க்கை மதிப்பெண்களை வாரி வழங்கியது.

வாழ்க்கை நடத்தும் இந்த தேர்வில் புத்தகங்களை திறந்து வைத்துக் கொண்டே எழுதலாம். கூடப்பிறந்தவர்கள், நண்பர்கள் எப்படி கேள்விகளை தேர்ந்தெடுத்து, பதில் எழுதுகிறார்கள் என்பதையும் பார்த்து, உங்கள் கேள்விகளை தேர்ந்தெடுக்கலாம்.

சிலர் கடைசிவரை சுலபமான கேள்விகளையே தேர்ந்தெடுப்பார்கள். சாதாரண படிப்பு, சாதாரண வேலை என வாழ்ந்து முடித்துவிடுவார்கள்.
வெகுசிலர் கடினமான கேள்விகளை தேர்ந்தெடுத்து, அதிக மதிப்பெண்களை பெற்று பெரிய வாழ்க்கை வாழ்வார்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். எனக்கு மட்டும் ஏன் கேள்விகள் கடினமாக இருக்கின்றன என்றால் கேட்பவர்கள் சிரிப்பார்கள். ஏனென்றால் கேள்வியின் நாயகனே - கேள்வியின் நாயகியே - நீங்கள்தான்!


- வரலொட்டி ரெங்கசாமி




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive