Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உள்ளாட்சி 14: குழந்தைகளை அள்ளி அரவணைக்கும் ‘குழந்தை கிராமங்கள்’!

          கொடைக்கானல் மலையடிவாரத்தில் வத்தலக்குண்டு அருகே உள்ளடங்கி இருக்கிறது ஜி.கல்லுப்பட்டி கிராமம். 
 
          ‘வாழ்க வளமுடன்…’ என்ற கணீர்க் குரலுடன் வரவேற்கிறார் பஞ்சாயத்துத் தலைவர் வளையாபதி. 60-ஐ தொடும் வயது. கதர் ஆடை, கனிவான முகம், இதமான பேச்சு. எதிர்படும் குழந்தைகள், ‘வாழ்க வளமுடன் தாத்தா’என்கிறார்கள். தோளில் தொங்கும் பையில் இருந்து அவர்களுக்குத் தின்பண்டங்களை எடுத்துத் தருகிறார். வழியில் அந்தோணி பால்சாமி நம்முடன் இணைந்துகொள்கிறார். சிறு நடையில் அழகான ஒரு குடியிருப்பு வருகிறது. சூழலே ரம்மியமாக தோன்றுகிறது. எங்கு பார்த்தாலும் பசுமை. ஏராளமான மரங்கள். ஆங்காங்கே காய்கறித் தோட்டங்கள். அழகான பூங்காக்கள், விளையாட்டு மைதானம், நூலகம், சமூக நலக் கூடங்கள் காணக் கிடைக்கின்றன. ஒரே மாதிரி வரிசையாக, அழகாக, எளிமையாகக் கட்டப்பட்டிருக்கின்றன வீடுகள். புரிகிறது, இது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட கிராமம்!
எதிர்படும் வீடுகளில் ‘‘வாங்க சார்… சாப்புட்டுப் போலாம். இன்னிக்கு நம்ம வீட்டுல மீன் குழம்பு!’’ என்று தாய்மார்களும் பிள்ளைகளும் வரவேற்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சொல்லி வைத்தாற்போன்று ஏழெட்டு குழந்தைகள், ஒரு அம்மா. சமூக நலக் கூடத்தில் ஆசிரியர்கள் இருவர் இந்திய அரசியல் சாசனம் குறித்து குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் குழப்பமாகதான் இருந்தது.
அந்தோணி பால்சாமிதான் பேசினார்: “இது குழந்தைகள் கிராமம் சார். கிராம பஞ்சாயத்துக்களின் ஆதரவுடன் ‘ரீச்சிங் டு அன்ரீச்டு’ தொண்டு நிறுவனம் இதுமாதிரி நான்கு கிராமங்களை அமைச்சிருக்கு. ஜி.கல்லுப்பட்டியில் ரெண்டு, கணவாய்ப்பட்டி, தருமத்துப்பட்டி ஆகிய இடங்களில் தலா ஒண்ணு அமைச்சிருக்கோம். அந்தந்த கிராமப் பஞ்சாயத்துக்களில் பேசி நிலம் வாங்குவது தொடங்கி இலவச குடி நீர் இணைப்பு, வரி விலக்குன்னு கிராம சபை தீர்மானம் மூலம் இந்தத் திட்டத்தை நிறைவேத்துறோம். நான்கு கிராமங்கள்லேயும் மொத்தம் 950 குழந்தைகள் இருக்கிறார்கள். அத்தனைப் பேரும் கைவிடப்பட்ட குழந்தைகள். பெற் றோரை இழந்த குழந்தைகளும் இருக் காங்க. ஒற்றைப் பெற்றோர் கொண்ட குழந்தை களும் இருக்காங்க. ஏன், பெற்றோர் மூலம் ஹெச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான குழந்தை களும் இருக்காங்க.
குழந்தைகளுக்கு உண்டு அம்மாக்கள்!
நாங்க இங்கே ‘அநாதை’ என்கிற வார்த் தையைக் கூட பயன்படுத்த மாட்டோம். குழந் தைகளுக்கு, தாங்கள் ‘பராமரிப்பு இல்லத்தில் வசிக்கிறோம்’ என்கிற மனநிலை வரக் கூடாதுன்னு தனித்தனி வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கோம். ஒவ்வொரு வீட்டுலேயும் ஒரு அம்மா இருப்பாங்க. ஒரு அம்மாவுக்கும் 6 முதல் 8 குழந்தைகள் இருக்காங்க. அதில் அவங்க சொந்தக் குழந்தையும் இருக்கும். கணவரை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர்தான் அந்த அம்மாக்கள்.
மாசத்துக்கு ஒரு குழந்தைக்கு 650 ரூபாயும் ஒரு குடும்பத்துக்குத் தேவையான அரிசி, ஒரு காஸ் சிலிண்டர் கொடுக்கிறோம். இந்த கிராமத்து பெண்களுக்குள்ளேயே கூட்டு றவு சங்கம் ஏற்படுத்திக்கிறாங்க. மொத்தமா மளிகை பொருட்கள் எல்லாம் வாங்கி பிரிச்சுக்கு வாங்க. குழந்தைகள் படிக்கிறதுக்குன்னு மேல்நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, நடு நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளின்னு நான்கு பள்ளிகள் அமைச்சிருக்கோம்” என்கிறார்.
ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிப் பதுடன் இவர்களின் சேவை நின்றுவிடுவது இல்லை. சுற்றுவட்டாரக் கிராமங்களில் எங்கு தேடினாலும் படிக்காத அல்லது பள்ளி இடைநின்ற ஒரு குழந்தையைக் கூட பார்க்க முடியாது. கிராமப் பஞ்சாயத்தின் மூலம் கிராமங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளை அடையாளம் காண்கிறார்கள். அந்த வகையில் ஜி.கல்லுப்பட்டி மற்றும் கெங்குவார்பட்டி கிராமத்து குழந்தைகள் சுமார் 700 பேர் இந்தப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இவர்களின் குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 1,500 குழந்தைகள். எவருக்குமே கல்வி கட்டணம் கிடையாது. நோட்டுப் புத்தகங்கள், சீருடை, மதிய உணவு அத்தனையும் இலவசம்.
அந்தோணி பால்சாமி மற்றும் பஞ்சாயத்துத் தலைவர் வளையாபதியுடன் மாணவிகள்.
கிராம மக்களுக்கு இலவச வீடுகள்!
கல்வி மட்டுமா... காந்தி கண்ட கனவை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். இதுவரை ஜி. கல்லுப் பட்டியின் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 8,700 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. சுமார் 300 சதுர அடியில் எளிமையான வீடுகள். பஞ்சாயத்து மூலம் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகள் முற்றிலும் இலவசம். அரசாங்கத்தில்கூட இலவச வீடுகள் வாங்க முடியாத பயனாளி களைக் கிராமப் பஞ்சாயத்து மூலம் தேர்வு செய்து வீடுகளைக் கட்டித் தருகிறார்கள். வீடுகளைக் கட்டுவதற்கு கிராம மக்களை ஒருங்கிணைத்து இவர்களே ஹாலோ பிரிக்ஸ் கற்களை உற்பத்தி செய்கிறார்கள். மரங் களின் பயன்பாட்டைத் தவிர்க்க சிமெண்டி லேயே கதவு, ஜன்னல்கள் தயாரிக்கிறார்கள்.
கட்டுமான தொழில் மூலம் உள்ளூர் மக்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்புகளை அளிக் கிறார்கள். இந்த கிராமத்திலேயே இயங்குகிறது கைத்தறி கூடம். உள்ளூர் பெண்கள் வேலைப் பார்க்கிறார்கள். நாடு முழுவதும் பரவலாக கைத்தறி தொழில் நலிவடைந்த நிலையில் இவர்களின் கைத்தறிக்கூடம் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. எளிய கிராம மக்களின் கரங்களால் நெய்யப்படும் துண்டு கள், டர்க்கி டவல்கள், மேஜை மற்றும் படுக்கை விரிப்புகள், சமையலறை துணி கள், கால் துடைப்பான்கள் போன்றவை ஆஸ்தி ரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ஏற்றுமதி யாகின்றன. உள்ளூர் விற்பனையும் உண்டு.
பஞ்சாயத்துடன் இணைந்து கிராம குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமங்களி லும் கிராமங்களுக்கு வெளியே மஞ்சலாற்றுப் படுகையிலும் பிரம்மாண்டமான கிணறுகளை வெட்டியிருக்கிறார்கள். அங்கிருந்து கிராமத்தின் மேல் நிலைத் தொட்டிக்கு தண்ணீர் வருகிறது. தவிர, சுற்றுவட்டாரக் கிராமங்களில் பஞ்சாயத்து நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் மக்களின் பொது பயன்பாட்டுக்காக 2,600 இடங்களில் ஆழ்துளை கிணறு மற்றும் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே கிராம மருத்துவமனையும் செயல்படுகிறது. தினசரி 100 பேர் வரை சிகிச்சைப் பெறுகிறார்கள். இரண்டு ரூபாய் கட்டணத்தில் ஊசி, மருந்து, மாத்திரைகள் தருகிறார்கள். இன்னும் இன்னும் நிறைய இருக்கிறது. ஜி.கல்லுப்பட்டியைச் சுற்றிப்பார்க்க ஒருநாள் போதாது.
ஜேம்ஸ் கிம்டன் தாத்தா!
“எல்லாத்துக்கும் காரணம் ஜேம்ஸ் கிம்டன் தாத்தா. எங்கப்பாரு பிரசிடெண்டா இருந்த காலத்திலேயே பஞ்சாயத்து அமைப்பின் வலிமையை உணர்ந்து இந்த ஊரை உருவாக்கினார் ஜேம்ஸ் கிம்டன். இந்தக் குழந்தைகள், குழந்தைகள் கிராமங்கள், கிராமங்களில் இருக்கிற வீடுகள், மருத்துவமனை ஒவ்வொண்ணுமே அவர் உருவாக்குனதுதான். அரசாங்க அதிகாரியாக இருந்த நான் அந்தப் பணியை உதறிட்டு பஞ்சாயத்து தலைவர் ஆனதுக்கு காரணமும் அவர்தான். வாங்க தாத்தாவைப் பார்க்கலாம்” என்று அழைத்துச் சென்றார் பஞ்சாயத்துத் தலைவர் வளையாபதி.
எளிமையான வீடு ஒன்றில் படுத்த படுக்கை யாக இருக்கிறார் ஜேம்ஸ் கிம்டன். வயது 90-ஐ தாண்டிவிட்டது. செவிலியர்கள் பராமரிக்கி றார்கள். நம்மை பார்த்து அசைகின்றன அவரது விழிகள். லேசாகப் புன்னகைக்கிறார். அது, அந்தக் கிராமத்தின் புன்னகை!
- பயணம் தொடரும்
நன்றி. தி. இந்து




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive