NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீட் தேர்வுக்கு ஒன்றிய அளவில் சிறப்பு பயிற்சி மையங்கள் தேவை




இந்தியாவில் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இன்று புகழ்பெற்ற மருத்துவர்களாக இருப்போர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். ஆனால் நீட் தேர்வால் பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள்கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத் தேர்வால் சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் இனிமேல் மருத்துவரே ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வி என்பது பொதுப் பட்டியலில் இதுவரை உள்ளது. எனவே, மத்திய அரசால் கல்வித் திட்டம் வகுக்கப்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒரு பாடத் திட்டமும்,மாநில அரசுகளால் வெவ்வேறு பாடத் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில், பல்வேறு நுழைவுத் தேர்வுகளைத் தவிர்க்கவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தவிர்க்கவும், இந்தியா முழுவதற்கும் ஒரே சீராக ( நீட்) நுழைவுத் தேர்வு நடத்தி அதனடிப்படையில்தான் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 2016-ல் அளித்த தீர்ப்பே இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.
பொது நுழைவுத் தேர்வு (நீட்) எழுத வேண்டிய பெரும்பான்மையான மாணவர்கள் கிராமப்புறங்களிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு நீர் தேர்வு பயிற்சி மையங்கள் கிராமப்புறங்களில் கிடையாது. அவர்களால் அதற்காகப் பெருமளவில் செலவும் செய்ய முடியாது.
மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்காக, 6 முதல் முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, இந்தியா முழுவதும் ஒரே கல்வித் திட்டம், ஒரே பயிற்றுவிக்கும் முறை, ஒரே தேர்வு முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்த பின்னரே, நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்ற தீர்ப்பைக் கொடுத்திருக்க வேண்டும் உச்ச நீதிமன்றம்.
மேலும், அனைத்து மாநில மொழிகளிலும் நீட் கேள்வித்தாள் தரப்பட வேண்டும். இதற்கான அடிப்படைகளை உருவாக்க அந்தந்த மாநில அரசுகளுக்கும்,மத்திய அரசுக்கும் குறைந்தது ஓராண்டுத் திட்டமிடல், 6-ல் தொடங்கி 12-ஆம் வகுப்பு வரை செயலாக்கம் என 7ஆண்டுகளாவது அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்.
நீட் தேர்வை எதிர்கொள்ளும்விதமான கேள்வித்தாள்கள் அடிப்படையிலான கல்விமுறையில் பயிற்றுவித்தல் 6-ம் வகுப்பு முதலே செயலில் இருக்க வேண்டும். இத்தகைய பயிற்சிமுறைகளை உறுதிசெய்தால் மட்டுமே, தனியாரால் பல லட்சங்களைப் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் சிறப்பு நீட் பயிற்சி வகுப்புக் கொள்ளைகளிருந்து மாணவர்களைக் காக்க முடியும்.
கடைக்கோடி கிராமப் பள்ளியில் பயிலும் மாணவரும் நீட் தேர்வை துணிவுடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள இயலும். இதைச் செய்யாமல், மேலோட்டமாக அதிரடித் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கினால், "தீர்ப்புகள் தரப்படலாம், சாமானியனுக்கான நீதியைத் தராமலேயே' என்ற நிலையில் முடிந்துவிடும்.
ஒரு காலத்தில் பியுசி என்னும் பாடத்திட்டத்தை கல்லூரியிலிருந்து மாற்றி பிளஸ் 2 பாடமாகப் பள்ளிக்கல்வியில் அறிமுகம் செய்த புதிதில் செயலாக்கம் நன்றாகத்தான் இருந்தது. அப்போது புளு பிரின்ட் போன்றத் திட்டங்கள் வராத காலம் அது. தன்னிடம் படிக்கும் மாணவர் டியூஷன் போனால் ஆசிரியர்கள் வருத்தப்பட்ட நேரம் அது. "ஏன் தம்பி, நான் சொல்லிக்கொடுப்பது உனக்கு விளங்கவில்லையா?, தயங்காமல் கேள், நானே உனக்கு நன்றாகச் சொல்லிக் தருகிறேன் எனக்கூறி மாணவர்களுக்குப் பக்கபலமாக நின்றார்கள் ஆசிரியர்கள்.
தமிழ்நாடு முழுவதுக்கும் அரசு, அரசு உதவி பெறும் ஏழே பொறியியல் கல்லூரிகளில் சில நூறு பொறியியல் இடங்களே என மொத்தத் தமிழகத்துக்கும் இருந்த காலம். என்றாலும், கட் ஆப் 160 என்ற அளவில் மதிப்பெண் பெற்றவர்களும் எளிதாக பொறியியல் கல்லூரிகளில் சேர முடிந்தது. மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவரும்கூட 189 கட் ஆப் பெற்றுள்ளார்.
கணிதப் பாடத்தில் 200-க்கு 90 மதிப்பெண் வாங்கிய மாணவரும் கூட, பி.எஸ்.சி. கணித வகுப்பின் முதல் நாள் பேராசிரியரின் கேள்விக்குப் புரிதலுடன் பதில் சொல்லும் நிலையிலிருந்தார். மதிப்பெண் குறைவென்றாலும், கற்றலுக்குக் குறைவில்லை என்ற நிலையிருந்தது அப்போது.
ஆனால் ஒரிரு ஆண்டுகளில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் பெருகத் தொடங்கியதிலிருந்து கல்வி வியாபாரமாகிவிட்டது. இன்றைய தமிழக மாணவர்கள் பள்ளிக் கல்வியைக் கல்வி வியாபாரிகளிடம் பறிகொடுத்துவிட்டு கற்றல் என்னும் தற்காக்கும் கருவியிழந்து பரிதாபமாக நிற்கின்றார்கள்.
நீட் தேர்வு குறித்து இன்னும் கிராமப்புற மாணவர்களில் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை. தமிழக அரசு இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது.
நீட் பொதுத்தேர்விலிருந்து கடந்த 2016-ல் தமிழக மாணவர்களைக் காப்பாற்றிய இந்த அரசு நிகழாண்டு அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
புரிதலும், கற்றலும் சரியாக இருந்தால் மட்டுமே நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்ற நிலையில், நம் பிளஸ் 2 பள்ளிக் கல்விமுறையின் மாதிரி வினாத்தாளை மட்டும் படித்துவிட்டு மதிப்பெண் ஈட்டும் பயிற்சி முறையைக் கைவிட்டு, நீட்-தேர்வில் வெற்றி பெறச் சரியான பாதையில் பயணத்தைத் துரிதப்படுத்த வேண்டும்.
தமிழகத்தின் 85 விழுக்காடு மருத்துவ இடங்களுக்கு, கற்றலும், புரிதலும் கொண்ட சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கே வாய்ப்பு அதிகம். சிபிஎஸ்சி பள்ளிகள் கிராமப்புறங்களில் முற்றிலுமாக இல்லை என்பது அனைவரும் அறிந்தது.
இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கே தனியார் சிறப்புப் பயிற்சி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதனால் சமூக நீதி அடியோடு அனைத்துக் கிராமப்புற மாணவர்களுக்கும் ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் சிபிஎஸ்சி பள்ளிக் கட்டணம், நீட் நுழைவுத் தேர்வுப் பயிற்சிக் கட்டணம் என பல லட்சங்கள் முதலீடு செய்தால் மட்டுமே மருத்துவக் கல்வி சாத்தியம். இது எப்படிக் கடைக்கோடி கிராமத்தில் வீட்டு வேலையையும் செய்துவிட்டுப் பள்ளிக்குச் செல்லும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் சாத்தியம்?.
உச்ச நீதிமன்றம் அனைவருக்கும் ஒரே தரமான கல்வி என்பதை உறுதி செய்து விட்டல்லவா நீட் பொதுத் தேர்வுக்கான தீர்ப்பைக் கொடுத்திருக்க வேண்டும்? அனைவருக்குமான ஒரே நுழைவுத் தேர்வு என்பதற்கான களத்தைத் தயார் செய்வதற்கே குறைந்தது 7 ஆண்டுகளாவது ஆகும்.
இதுகுறித்து கல்வியாளர்களையும், தொடர்புடைய மாநிலங்களையும் கலந்துபேசாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எடுத்துள்ள முடிவு எளிய மக்களுக்கு எதிரானதானதாகி விட்டது.
கடந்த 15 ஆண்டுகளாக, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மத்தியத் தொகுப்புக்குத் தரப்படும் 15 விழுக்காடு மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ் இடங்கள் பெரும்பாலும் வெளிமாநில மாணவர்களுக்குச் சென்றுவிடுகின்றன.
இந்நிலை குறித்து எந்த அரசியல் கட்சியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவை கவலையும் படாது. நீட் தேர்வு தொடங்க இருக்கும் ஒரு வாரத்தில்தான் நீட் தேர்வு ரத்து கோரி அரசியல் கட்சியினர் குரல்கொடுக்கிறார்கள். தவிர,நீட் தேர்வுக்கு மாணவர்களை எப்படித் தயார் செய்வது என்று யோசிப்பதே இல்லை.
மத்திய அரசு கொண்டு வரும் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன என்று பள்ளி,கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கிராமப்புற பகுதிகளை மையமாக கொண்டு இத்தகைய பயிற்சி மையத்தைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் தொடங்கினால் சிறப்பாக இருக்கும். அது கடைக்கோடி கிராமப் பகுதி மாணவர்களுக்கும், நகரப்புற மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். தற்போது காலாண்டுத் தேர்வு தொடங்கவுள்ள நிலையில்,இந்தப் பயிற்சி மையங்களை விரைந்து தொடங்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive