தேர்வுக்கு முன்பே பிளஸ் 1, 'அட்மிஷன்' : நன்கொடையுடன் முன்பதிவு அமோகம்

பொதுத் தேர்வுகள் துவங்க, இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடக்கிறது. பலர், தேர்வு எழுதும் முன்பே நன்கொடை கொடுத்து, இடங்களை முன்பதிவு செய்கின்றனர். தமிழகத்தில், 10 - பிளஸ் 2 வரை, மார்ச்சில் பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளன. தேர்வு முடிந்து, 'ரிசல்ட்' வந்த பின்னே, மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில், அடுத்த வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். 


ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளி கள், பிளஸ் 1 சேர்க்கையை, முன்கூட்டியே துவக்கி விட்டன. குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை, நாமக்கல், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின், பிரபல பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தீவிரம் அடைந்துஉள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, விண்ணப்பங்கள் வழங்கி, பொதுத் தேர்வில் எடுக்க உள்ள மதிப்பெண்ணை, தற்போதே தோராயமாக கேட்கின்றனர். அதன்படி, பிளஸ் 1 பாடப்பிரிவுகளில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பல பெற்றோர், ஒரு லட்சம் ரூபாய் வரை, நன்கொடை கொடுத்து, பிளஸ் 1 இடங்களை, 'புக்' செய்வதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது குறித்து, பெற்றோர் கூறியதாவது: பலர் பணம் கொடுத்து, இடங்களை முன்கூட்டியே புக் செய்வதால், ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற்றாலும், விரும்பும் பள்ளிகளில், விரும்பும் பாடப்பிரிவுகளில் இடங்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கல்வித் துறை தலையிட்டு, விதிகளை மீறி, தற்போது மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கைகளை, உடனே ரத்து செய்ய வேண்டும். மேலும், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விதிகள் மற்றும் விண்ணப்பம் வழங்கும் தேதியை, அரசே நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Share this

1 Response to " தேர்வுக்கு முன்பே பிளஸ் 1, 'அட்மிஷன்' : நன்கொடையுடன் முன்பதிவு அமோகம்"

  1. கல்விக்கு ஆகும் செலவை சுமையாகக் கருதாமல் எதிர்கால சந்ததியினருக்கு அரசுசெய்ய வேண்டிய கடமை என்று கருதி தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுபள்ளிகளாக மாற்றினால் ஒழிய இதுபோன்ற பிரச்சினை களுக்கு தீர்வுகாண்பது கடினமே.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...