மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஒருநாள் பயணத்துக்கு பயன்படும் பாஸ் கட்டணம் ரூ.80 ஆக உயர்வு: வரும் 8-ம் தேதியில் இருந்து அமலாகிறது

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் ஒரு நாள் பயண பாஸ் கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, வரும் 8-ம் தேதிமுதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் 806 வழித்தடங்களில் 3,700-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரி யாக 48 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னையின் மாநகரபகுதியில் எல்லை விரிவாக்கத்தின் காரணமாக புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வெளியூர்களில் இருந்து வந்து செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக ரூ.50 கட்டணம் கொண்ட ஒரு நாள் பயணச்சீட்டு மாநகர போக்குவரத்து கழகம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு பேருந்துகளில்மாறி செல்வோர் மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கு வசதி யாக ஒரு நாள் பயணச்சீட்டு பயனுள்ளதாக இருக்கிறது.இதன்படி, தினமும் சராசரி யாக 5 லட்சம் பேர் ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் பயன்படுத்துகின்றனர். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் பயன்படுத்தலாம். டிக்கெட் அச்சடிப்பது கணிசமாக குறைவதால் நிர்வாகத்துக்கு செலவு குறைகிறது. பயணிகளுக்கும் கட்டண செலவு கணிசமாக குறைகிறது.
தமிழக அரசு கடந்த 20-ம் தேதி பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படாமல், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டனர்.இதற்கிடையே, இதுவரையில் வழங்கப்பட்டு வந்த ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் கட்டணம் ரூ.50 இருந்து ரூ.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் 8-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என போக்குவரத்து கழக அலுவலர்கள் சிலர் தகவல் தெரி வித்துள்ளனர்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாநகர போக்குவரத்து கழகம் மூலம் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 3 வகையான பாஸ் குறித்துதற் போது கூற முடியாது. இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றனர்.

Share this