துப்பாக்கிச் சூடு: மாணவர்களைக் காப்பாற்றிய தமிழ்ப் பெண்!

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்களைக் காப்பாற்றிய தமிழ்ப் பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 14ஆம் தேதி திடீரென நுழைந்த முன்னாள் மாணவர் நிக்கோலஸ் க்ரூஸ் அங்கிருந்தவர்களை நோக்கி வெறித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தில் மாணவர்கள் உட்பட 17 போ் உயிரிழந்தனர். 50 போ் காயடைந்தனா். இந்தச் சம்பவம் ஃப்ளோரிடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்பள்ளியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாந்தி விஸ்வநாதன் என்ற ஆசிரியை 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அல்ஜீப்ரா பாடம் எடுத்துவருகிறார். சம்பவத்தன்று பாடம் எடுத்துக்கொண்டிருந்த சாந்தி சுதாரித்துக்கொண்டு, தனது வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை மூடி, மாணவர்களை பெஞ்சிக்கு கீழே அமைதியாக அமருமாறு கட்டளையிட்டார். ஆசிரியர் சொன்னபடி மாணவர்களும் பெஞ்சுக்குக் கீழே அமர்ந்தனர்.

அப்போது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அந்த வகுப்பறை வழியே நிக்கோலஸ் க்ரூஸ் சென்றுள்ளார். கதவுகள் அடைக்கப்பட்டு அமைதியாக இருந்ததால் கண்டுகொள்ளாமல் வகுப்பறையைத் தாண்டிச் சென்றுள்ளார். இதனால் அங்கிருந்த இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தப்பினர்.

இந்நிலையில், பள்ளிக்கு வந்த அதிரடிப்படை போலீசார் மாணவர்கள் பதுங்கியிருந்த கதவைத் திறக்கக் கூறியுள்ளனர். கதவைத் திறக்க மறுத்த ஆசிரியர் முடிந்தால் கதவை உடைத்து உள்ளே வாருங்கள் என்று கூறியுள்ளார்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் மாணவர்களை மீட்டு வெளியே அனுப்பினர்.

துப்பாக்கிச் சூடு நடக்கும்போது அனைவரும் அலறியடித்து ஓடிய நிலையில் வகுப்பறையைப் பூட்டி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியருக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டுகள் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன. உயிரிழந்த மாணவர்களுக்கும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Share this

0 Comment to "துப்பாக்கிச் சூடு: மாணவர்களைக் காப்பாற்றிய தமிழ்ப் பெண்! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...