இன்று மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டபடி இன்று (பிப்ரவரி 16) வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.மின் ஊழியர்களுக்குக் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை. இதனை வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிஐடியு, பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதனையடுத்து கடந்த மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பிப்ரவரி 12ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாமல் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த தொழிற்சங்கங்கள் 16ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தன.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தொழிலாளர் நலத் துறை ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் இடையே அதிகாரிகள் திடீரென வெளியேறியதாகத் தகவல் பரவியது. பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் பாதியிலேயே நிறைவடைந்தது. அதன் பின்பு, மூன்றாவது கட்டமாக, இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் கடும் கோபமடைந்துள்ள மின் வாரிய ஊழியர்கள் இன்று (பிப்ரவரி 16) திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும், மின்சார வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Share this