புதிய பாடப்புத்தகம் அச்சிடுவது எப்போது?

புதிய பாடத்திட்டப்படி, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகம் அச்சிடும் பணி, ஒரு வாரத்தில் துவங்க உள்ளது. தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளுக்கு மேலாகவும், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளை கடந்தும், பாடத்திட்டம் மாறாமல் உள்ளது. அதை மாற்ற, கல்வியாளர்கள் அறிவுறுத்தியதால், தமிழக அரசு, புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி, பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை கவனித்து வருகிறார். அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு, பாடத்திட்டத்தை வடிவமைத்து உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, பாட புத்தகம் எழுதும் பணி முடிந்துள்ளது. ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாட புத்தகங்களுக்கு, மறு ஆய்வு பணிகள் துவங்கியுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில், புதிய பாடபுத்தகங்கள் அச்சிடும் பணியை துவக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பாடத்திட்டம் நிறைவு பெற்றதும், அதற்கான ஒப்புதலை, தமிழக அரசு வழங்க வேண்டும். இதற்காக, புதிய பாடத்திட்ட அறிக்கை, முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த, 2011ல், தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஒப்புதல் கிடைக்காததால், அது, கடைசி வரை அமலுக்கு வரவில்லை. எனவே, தற்போதைய புதிய பாடத்திட்டத்திற்கு, முதல்வர் ஒப்புதலை பெற, அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

Share this