பிரதமர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வாடகை '‛டிவி' : கல்வித்துறை உத்தரவு

'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகம் மூலம் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சிக்காக 'டிவி' இல்லாத அரசு பள்ளி நிர்வாகங்கள் அதனை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி 'எக்ஸாம் வாரியர்ஸ்' என்ற நுாலை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர் அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ளும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பிரதமர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி பிப்.,16 காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை நடக்க உள்ளது.இதனை அனைத்து மொழி துார்தர்ஷன் சேனல்களில் ஒளிபரப்பவும், வானொலி மூலம் ஒலிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயர் தொழில்நுட்பத்தில் கணினி மற்றும் சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதற்காக தடையற்ற மின்சார வசதி இருக்குமாறும் பள்ளி நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் 'டிவி' , ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் வசதி இல்லாத அரசு பள்ளிகள் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட நிதி பெற்று அவற்றை வாடகைக்கு எடுத்து நிகழ்ச்சியை மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். நிகழ்ச்சி சாதக பாதகங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் கருத்துக்களை தெரிவிப்பது அவசியம் என கல்வித்துறை, மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Share this