இளைஞர்களை மையப்படுத்திய அரசுத் திட்டங்கள்!

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இளைஞர்களை மையப்படுத்திய வளர்ச்சிக்குப் பக்கபலமாகவே இருக்கும் என்று மத்திய வடகிழக்குப் பிராந்திய அமைச்சகத்தின் இணையமைச்சரான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற மூன்று நாள்கள் ‘உதான் உத்சவ் 2018 யூத் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜிதேந்திர சிங் பேசுகையில், “தற்போதைய நிலையில் இந்தியாவின் மக்கள்தொகையில் 70 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ள இளைஞர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்துள்ளது. புதிய இந்தியா உருவாக்கப் பாதையில் இவர்களின் பங்கு இன்றியமையாததாகும். உதான் திட்டத்தில் கலை, கலாசாரம், சிற்பம், ஓவியம், நாடகம் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக இளைஞர்களுடன் இணைப்பில் இருக்க முடிகிறது.
கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் யாவும் சமூகச் சீர்திருத்தங்களுக்கு வழிகோலும் திட்டங்களாகும். அதில், ஜன் தன் யோஜனா மற்றும் அடல் பென்சன் யோஜனா ஆகிய திட்டங்கள் குறிப்பிடத்தகுந்தவை. இளைஞர் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள அரசு வகுக்கும் திட்டங்கள் அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சுய வேலைவாய்ப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் திட்டங்களாக இருக்கின்றன. ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, முத்ரா யோஜனா போன்றவை இளைஞர் நலனுக்கான திட்டங்களின் சில உதாரணங்களாகும்” என்றார்.

Share this