++ முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு பணிகள் வழங்க தடை தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கை ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை தேர்வு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்வுத்துறை வாரியம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

பிளஸ்–2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து பிளஸ்–1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த பொதுத்தேர்வுகளில் நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்பட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது தேர்வுத்துறை அது போன்ற பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து அந்த பள்ளிகளின் ஆசிரியர்களை தேர்வு பணிகளில் ஈடுபடுத்த கூடாது என்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றனர்.

தேர்வுத்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கடந்த காலங்களில் பொதுத்தேர்வில் முறைகேடு செய்த தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தேர்வு பணிகளோ, விடைத்தாள் திருத்தும் பணிகளோ கொடுக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், தேர்வு பணிகளில் எவ்வளவு ஆசிரியர்கள் ஈடுபட போகிறார்கள் என்பது குறித்து உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘இன்னும் பள்ளிக்கல்வி துறையில் இருந்து எத்தனை மாணவர்கள் தேர்வு எழுத இருக்கிறார்கள் என்ற முழுவிவரம் கிடைக்கப்பெறவில்லை. அது வந்ததும், அந்த எண்ணிக்கையை, 20 ஆல் வகுத்தால்(ஒரு அறைக்கு 20 மாணவர்கள் என்பதை வைத்து) எவ்வளவு ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுவார்கள் என்பது தெரியும்’ என்றார்.

குறைந்த மதிப்பெண் பெறுவோருக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்க ரேங்க் பட்டியல் வெளியிடாமல் புதிய முறையில் கடந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மேலும் ஒரு புதிய முறையை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிக்க இருக்கிறது.

அதாவது, தேர்வு முடிவு வெளியாகும் முதல் நாள் அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளின் மதிப்பெண்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் அப்படி கிடையாது. மாறாக தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் மதிப்பெண்களை ஆன்–லைனில் பார்த்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இதற்கிடையில் தேர்வு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதில் தேர்வுத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் பல எடுக்கப்பட இருக்கின்றன.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...