ஜிஎஸ்டியில் தற்போது 35 பொருட்களுக்கு மட்டுமே 28 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இந்த வரிவிதிப்பின்படி மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி, ஒன்றிய அரசின் கலால் வரி இரண்டும் நீக்கப்பட்டு 5,12,18, 28 ஆகிய 4 விகிதங்களில் ஒரே வரியாக ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. உணவுப் பொருட்களுக்கு பூஜ்ய வரி விதிக்கப்பட்டது. இந்த வரி அமல்படுத்தப்பட்டபோது 226 பொருட்களுக்கு அதிகபட்ச வரியான 28 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் ஜிஎஸ்டியில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள மாநில நிதி அமைச்சர்களை ஒருங்கிணைத்து ஒன்றிய நிதி அமைச்சரின் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டது. இந்தக் கவுன்சில் அவ்வப்போது கூடி பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் 28 கூட்டங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலால் நடத்தப்பட்டுள்ளது. 28ஆவது கூட்டம் ஜூலை 21ஆம் தேதி டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்திலும் 50க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது 35 பொருட்கள் மட்டுமே 28 விழுக்காடு வரிவிதிப்பில் உள்ளன. சிமென்ட், வாகன உதிரிப் பாகங்கள், மோட்டார் சைக்கிள்கள், சொகுசுக் கப்பல்கள், குளிர்பானங்கள், விமானங்கள், புகையிலை, சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் தற்போது 28 விழுக்காடு வரி விதிப்பில் உள்ளன. ’ஜூலை 21ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 28 விழுக்காடு வரிவிதிப்பில் இருந்த 15 பொருட்களின் வரியை 18 விழுக்காடாக ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ.6,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மூத்த அரசு அதிகாரி ஒருவர் பினான்சியல் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
நாப்கின்களுக்கு 12 விழுக்காடு வரி விதித்திருப்பது நியாயமற்றது என எதிர்க்கட்சிகளும், பல்வேறு பெண்கள் நல அமைப்புகளும் ஒன்றிய அரசைக் கண்டித்து வந்த நிலையில் 27 கூட்டங்களாக இதைப் பரிசீலிக்காத மோடி அரசு, இப்போது 28ஆவது கூட்டத்தில் வரியை நீக்கியிருப்பது 2019ஆம் ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் என்று பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments