புதிய பாடத்திட்டம் பற்றி
ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி தேவை என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து, அவர் நேற்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் “மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக தமிழ்நாட்டில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் 1,6,9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 11ஆம் வகுப்புக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாகத் தயாரிக்கப்பட்டிருப்பதால் அவற்றை மாணவர்கள் புரிந்துகொள்வதில் பல தடைகள் உள்ளன. பெரும்பாலான ஆசிரியர்களால் முற்றிலும் புதிதாகத் தோன்றும் இப்பாடங்களை நடத்த முடியவில்லை. புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது இத்தகைய சிக்கல்கள் எழுவது இயல்புதான்.
இந்த நிலையில், பல மாணவர்கள் கடினமான பாடங்களை படிக்கத் தயங்கி வேறு படிப்புகளுக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் இருந்து விலகி, வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். வேறு பலர் 11ஆம் வகுப்பிலிருந்து விலகி பல தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.
11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பாடத்திட்ட பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற இயலாது என்ற அச்சம்தான் மாணவர்கள் வேறு படிப்புகளில் சேருவதற்குக் காரணம் ஆகும். புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, புதிய பாடங்களை மாணவர்களுக்குப் புரியும் வகையில் நடத்துவதற்கு வசதியாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புதிய கல்வியாண்டு தொடங்கி 50 நாட்களுக்கு மேலாகியும் ஆசிரியர்களுக்கான பயிற்சி இன்னும் நிறைவடையவில்லை.
செப்டம்பர் முதல் வாரத்தில் 11ஆம் வகுப்புக்கு காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு இன்னும் பயிற்சியளித்து முடிக்கப்படவில்லை என்பதிலிருந்தே இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித் துறை எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பல இடங்களில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குக் கூட பாடங்களில் ஐயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
எனவே, புதிய பாடத்தின் மீதான புரிதல் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதற்கேற்றவாறு ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்
உண்மை தான்
ReplyDeleteஉண்மை தான்
ReplyDelete