தமிழ் நூல்களுக்கு உயிர் கொடுக்கும் முதியவர்கோவையில் தமிழ் மொழிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழ் நூல்களை ஒருங்கிணைக்கும் ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர் தமிழப்பன்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். சுப்ரமணியன் என்ற பெயரை ஈழம் தமிழப்பன் என்று மாற்றிக்கொண்ட இவர், தற்போது கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். பள்ளி படிப்பை முடித்தவுடன் சென்னையில் வருவாய் அலுவலராக பணியில் சேர்ந்தவர், தமிழ் மொழி மேல் கொண்ட ஈர்ப்பால் புத்தகங்களையும், நூல்களையும் படிக்க துவக்கியுள்ளார். தொடர்ந்து தமிழ்மொழியில், இளநிலை முதல் முனைவர் பட்டம் வரை பெற்றவர், புத்தகம் எழுத துவங்கியுதுடன், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் நூல்களை சேகரிக்கும் பணியை தொடக்கியுள்ளார். அரசு பணியிலிருந்து ஓய்வுப்பெற்றவுடன், உலக தமிழ் நூலக அறக்கட்டளை என்ற பெயரில் உலகில் உள்ள அனைத்து தமிழ் நூல்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஈழம் தமிழப்பன்.

தற்போது 84 வயதிலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் சிறிதும் தொய்வின்றி செய்து வரும் இவர், தமிழ் நூல்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் தான் உலகில் தொன்மையான தமிழ்மொழியின் ஆளுமை அனைவரையும் சென்றடையாமல் இருப்பதாகவும், அதனை முறைப்படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ஓலைச்சுவடி, நாளிதழ், நூல்களாக, புத்தகம் என பல்வேறு வடிவங்களில் இருந்த 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான தமிழ் நூல்களை சேகரித்து கணினியில் பதிவேற்றம் செய்துள்ள ஈழம் தமிழப்பன், பதிவேற்றம் செய்துள்ள நூல்களை இணையத்தளமாக அமைக்கும் முயற்சியில் தான் தற்போது ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் முதிர்வு காரணமாகவும், கணினி கையாள்வது குறித்து தெரியாததால், தற்போது அந்த பணியில் சுணக்கம் ஏற்பட்டதாக கவலை தெரிவிக்கும் இவர், முழுமையான ஈடுபாட்டுடன் தமிழ்மேல் பற்றுக்கொண்டவர்கள் இந்த முயற்சிக்கு உதவ வேண்டும் என்கிறார். தமிழ்மொழியை வருங்கால தலைமுறையினர் நேர்த்தியாக கற்க உதவும் வகையில் இந்த இணையத்தளத்தை அமைக்கவுள்ளதாக கூறும் ஈழம் தமிழப்பன், உலகம் முழுவதும் தமிழ் நூல்களை பயனற்றதாக வைத்துள்ளவர்கள் தந்து உதவும் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார்.

84 வயதிலும் தமிழ்மொழி உச்சரிப்பில் சிறிதும் பிழையின்றி ஆங்கில கலப்பில்லாமல் பேசும் ஈழம் தமிழப்பன், தமிழை தன் மூச்சாகவே எண்ணி தனி மனிதனாக தமிழ்மொழி நூல்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this

0 Comment to "தமிழ் நூல்களுக்கு உயிர் கொடுக்கும் முதியவர் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...