ஐஐஎம்
போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை
அளிப்பதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
ஒட்டெம் டாய் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., போன்ற மேற்படிப்பு படிக்க
பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தாழ்த்தப்பட்ட,
பழங்குடியின மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறும் வகையில் ஆண்டுக்கு 100
தகுதியுள்ள மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.
அவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு பயிற்சி அளிப்பதில் தலைசிறந்த பயிற்சி
நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம்
100 பேருக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
இந்த நிலையில், ஒரு பயிற்சி நிறுவனத்தைத் தேர்வு செய்து ஒரே இடத்தில்
மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது நடைமுறை
சாத்தியமில்லாதது என ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பொது நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கும் திட்டத்துக்கான
விதிகளுடன், கூடுதலாக விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிய விதிகள் என்ன?: ஒரே நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக பல்வேறு
நிறுவனங்களைத் தேர்வு செய்யலாம். பயிற்சியை ஒரே நகரத்தில் மட்டும்
மேற்கொள்ளாமல், திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய நகரங்களிலும்
நடத்தலாம். ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு நிறுவனங்களை அங்கீகாரம் செய்யலாம்.
இப்போதுள்ள சந்தை விலை விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம்,
பயிற்சிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்யலாம்.
பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில்
சேரும் ஆதிதிராவிடர் பயிற்சியாளர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ்
நிதியுதவி அளிக்கலாம். பயிற்சியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதை
உறுதி செய்வதற்காக தாட்கோவால் நிதி அளிக்கப்படும் மாணவ-மாணவிகள் பயிற்சி
நிறுவனங்களின் வழக்கமான வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். தரமான
பயிற்சியை அளிக்கும் வகையிலும், பயிற்சியாளர்களின் வருகையில் குறைபாடு
ஏற்படாமல் இருக்கவும் தனி வகுப்புகளுக்கு அனுமதிக்கக் கூடாது.
மாணவர்கள் வழக்கமான வகுப்புகளில் சேர்க்கப்பட வேண்டும். இணையதளம் அல்லது
விரைவாக முடிக்கும் வகுப்புகளாக இருக்கக் கூடாது. பயிற்சியின் காலம்
குறைந்தபட்சம் 100 மணி நேரம் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கட்டணம்
பயிற்சி நிறுவனத்தின் கட்டணம் அல்லது ரூ.50 ஆயிரம் ஆகியவற்றில் எது குறைவோ
அந்தத் தொகை அளிக்கப்பட வேண்டும் என்று ஒட்டெம் டாய் தனது உத்தரவில்
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...