மாற்று திறனாளி இளைஞருக்கு தேசிய விருதுசென்னையைச் சேர்ந்த, நடக்க முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி இளைஞர், நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்து, ஜனாதிபதியின், 'ரோல் மாடல்' விருது பெற்றார்.

சென்னை, வடபழனியைச் சேர்ந்த, ராஜசேகரன் - வனிதா தம்பதியின் இரண்டாவது மகன், ஸ்ரீராம் சீனிவாஸ், 26. பிறவியிலேயே, 90 சதவீதம் நடக்க முடியாத, 83 சதவீதம் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி.இவர், 10 வயது வரை, படுக்கையிலேயே இருந்தார். மற்றவர்கள் துணையின்றி இவரால், எதுவும் செய்ய முடியாது.டாக்டர்கள் ஆலோசனைப்படி, தண்ணீரில் நடக்கும் பயிற்சியை பெற்றோர் அளித்தனர்.

அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்றாலும், கைகளால் நீந்த கற்றுக் கொண்டார் .இதையடுத்து, சீனிவாஸ் வாழ்க்கையில் புதிய விடியல் பிறந்தது.தொடர்ந்து, அவருக்கு, பெற்றோர் நீச்சல் பயிற்சி அளித்தனர். நான்குஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவின், மாண்டியாவில் நடந்த, 25 மீட்டர் நீச்சல் போட்டியில், நான்காவது இடம் பெற்றார். இது, அவரது பெற்றோருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

தொடர்ந்து, சீனிவாசை ஊக்கப்படுத்தினர். இதன் பலனாக, மாற்று திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் பங்கேற்று, 11 விருதுகள், நீச்சல் போட்டியில், 12, கடல் நீச்சல் போட்டிகளில் நான்கு விருதுகள் பெற்றுள்ளார்.வரும், 2019ம் ஆண்டு, மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று தேர்வு, கோவாவில் சில மாதங்களுக்கு முன் நடந்தது.முதல் சுற்றில், 36 பேரில் ஒருவராக தேர்ச்சி பெற்ற சீனிவாஸ், இரண்டாவது சுற்றில் தேர்ச்சி பெறவில்லை. தேர்வு கமிட்டியினர், 'அவரால் சுயமாக செயல்படமுடியாது' என, காரணம் கூறினர்.

இது குறித்து, கடலோர காவல் படை, ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபுவிடம் தெரிவித்த போது, கடல் நீச்சல் போட்டியில், சீனிவாசை பங்கேற்க வைத்தார். ஜூலையில்,கடலுார் - புதுச்சேரி இடையே, கடலில், 5 கி.மீ.,யை, மூன்று மணி நேரம், 18 நிமிடங்களில் நீந்தி, சீனிவாஸ் சாதனை படைத்தார்.இதையடுத்து, பல்வேறு குறைபாடுகள் இருந்தும், நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்ததற்காக, 2018ம் ஆண்டுக்கான, ஜனாதிபதியின், 'நேஷனல் ரோல் மாடல்' விருது, சீனிவாசுக்கு வழங்கப்பட்டது.சமீபத்தில் டில்லியில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா, சீனிவாசுக்கு இந்த விருதை வழங்கினார்

Share this