அரசு
பள்ளிகளில் முதல் முறையாக, சென்னை, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில்,
புகைப்பட வருகை பதிவு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.மாணவர்களை புகைப்படம்
எடுத்து, வருகைப்பதிவு செய்யும் முறையை, அரசு பள்ளியில் அறிமுகம் செய்ய,
பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. பெங்களூரை சேர்ந்த, ஐ.சி.இ.டி., என்ற
நிறுவனம் சார்பில், 'ஆன்ட்ராய்ட்' வகை செயலி வழியாக, இந்த தொழில்நுட்பம்
அமலாகிறது.இதுகுறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் கூறியதாவது:
நாட்டிலேயே முதன்முறையாக, புகைப்பட வருகைப்பதிவு திட்டம், தமிழக அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது. சீனாவில், ராணுவத்திலும், சில துறைகளிலும், இதை செயல்படுத்துகின்றனர். வகுப்பில் உள்ள மாணவ, மாணவியரின் புகைப்படங்கள், முதலில் சேகரிக்கப்பட்டு, அவை, 'ஆன்ட்ராய்ட் ஆப்' மற்றும், கணினி சர்வரில் உள்ளீடு செய்யப்படும்.வகுப்பு ஆசிரியர், தங்கள் மொபைல் போனில், ஆன்ட்ராய்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதிலுள்ள வசதியை பயன்படுத்தி, வகுப்பில் உள்ள அனைத்து மாணவ, மாணவியரின் முகம் பதிவாகும் வகையில், ஒரே புகைப்படமாக எடுக்கலாம். அந்த புகைப்படத்தில் பதிவாகும் மாணவ, மாணவியரின் முகங்கள், செயலி வழியாக, வருகைப்பதிவாகி விடும்.இந்த தொழில்நுட்பத்தால், தவறான வருகைப்பதிவு செய்ய முடியாது. வருகைப்பதிவு எடுக்கும் நேரம் குறையும். கணினி முறையில், வருகைப்பதிவு விபரங்களை தொகுத்து வைக்கலாம். அவற்றை, யாரும் திருத்த முடியாது. இது, முழுக்க முழுக்க, 'ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ்' என்ற, கணினி வழி செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தில் செயல்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், 8ம் வகுப்புக்கு மட்டும், புகைப்பட வருகை பதிவு முறை, சோதனை முயற்சியாக அமலுக்கு வருகிறது. வரும், 10ம் தேதி, தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இதை துவங்கி வைக்கிறார்.
திட்டத்தின் வெற்றியை பொறுத்து, மற்ற வகுப்புகளுக்கும், மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அசோக் நகர் பள்ளியில், நுழைவு வாயில் கேமரா வழியாக, மாணவியரை புகைப்படம் எடுத்து, வருகைப்பதிவு செய்யும் முறை, ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...