இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த உத்தரவாதமும் தர இயலாது - பள்ளிக்கல்வி துறை செயலாளர் உறுதி

Source : Thanthi TV

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக ஒரு நபர் கமிஷன் அறிக்கை வரும்வரை எந்த உத்தரவாதமும் தர இயலாது என்று பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்தார்.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா? என்பது குறித்து பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
ஒரு நபர் கமிஷன் அறிக்கை வரும் வரை இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து எதுவும் சொல்ல முடியாது. அந்த அறிக்கை தாக்கல் செய்த பிறகு தான் முடிவு எடுக்க முடியும். கமிஷன் அறிக்கை வரும் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும்.
 
நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால் ஒரு நபர் கமிஷன் அறிக்கை வரும் வரை எந்த உத்தரவாதமும் எங்களால் தர இயலாது. கமிஷன் அறிக்கை வருவதற்கு முன்பு எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும். ஆசிரியர்கள் இதை புரிந்து கொள்ளவில்லை.
இந்த துறை மட்டுமல்ல 2009-ம் ஆண்டில் இருந்து பல்வேறு துறைகளில் இந்த பிரச்சினை இருந்து வருகிறது. 6-வது ஊதியக்குழுவில் ஒரு குரூப்-க்கு இவ்வளவு தான் சம்பளம் என்று சொன்ன பிறகு, அதை ஏற்று அந்த துறைக்கு வருகிறார்கள். பிறகு எங்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுங்கள் என்று ஏன் கேட்கிறார்கள்? இது நியாயமா?
 
அரசின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்தார்கள். அரசின் கவனத்துக்கு வந்துவிட்டது. அதன் பிறகு உத்தரவாதம் கொடுங்கள் என்று சொல்கிறார்கள். எனக்கு அதற்கான அதிகாரம் கிடையாது. ஒரு நபர் கமிஷன் அறிக்கையை மதிப்பாய்வு எப்படி செய்ய முடியும்?.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this

0 Comment to "இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த உத்தரவாதமும் தர இயலாது - பள்ளிக்கல்வி துறை செயலாளர் உறுதி "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...