NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமவேலை சமமற்ற ஊதியம்...! தொடரும் போராட்டங்கள்!! ஒரு பார்வை !!

"சம வேலை, சம ஊதியம்”, ``ஊதிய உயர்வு" என்பதுதான் ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ள போராட்டங்களின் வாயிலாக பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் வைக்கும் கோரிக்கை. அதிகளவில் மாநில உரிமைகளைப் பேசுகின்ற மாநிலம் தமிழ்நாடு. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாட்டை நீக்கி 1.6.1988 முதல் மத்திய அரசுக்கு இணையான அளவு ஊதியத்தை வழங்கி வருகின்றது தமிழக அரசு. இந்நிலையில் 1.6.2009-ம் ஆண்டு வெளியான தமிழ்நாடு 7-வது ஊதியக் குழுவின் அரசாணை மத்திய, மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை அதிகரித்தது. இந்த 234-வது அரசாணை வெளியானதிலிருந்தே அவற்றை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் பின்னர் 11.10.2017-ம் ஆண்டு வெளியான 8-வது ஊதியக் குழுவும் ஏற்கெனவே நீடித்து வந்த ஊதிய முரண்பாடுகளை மேலும் அதிகரித்தது. கஜா புயல் டெல்டா மக்களின் வாழ்வை மோசமான நிலைக்கு இழுத்துச் சென்ற நிலையில், ஆசிரியர்கள் தங்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கச் சொல்லி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். ஊதிய முரண்பாடுகளுக்குக் காரணமாக உள்ள 234 மற்றும் 303 ஆகிய அரசாணைகளை எரித்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

`கஜா புயலின் பாதிப்பிலிருந்தே தமிழகம் மீளாத நிலையில் ஆசியர்கள் தங்களின் போராட்டங்களைக் கைவிட வேண்டும்' எனத் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படாத காரணத்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கெனவே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தியபோது, அரசியலமைப்புச் சட்டம் 226-வது பிரிவின் கீழ் வேலைநிறுத்தத்தில் தலையிட அரசுக்கு அதிகாரம் உண்டு என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. சென்ற முறை நடந்த வேலை நிறுத்தத்தையே நீதிமன்றம் தலையிட்டு நிறுத்தியது. முதல்வரும் போராட்டத்துக்கு எதிராக உள்ள நிலையில் இந்தப் போராட்டங்களை நடத்த அரசு அனுமதிக்குமா என்ற கேள்வியும் நம் முன் எழுகின்றது.

மத்திய, மாநில அரசுகளுக்கான ஊதிய முரண்பாடுகள் ஒருபுறமிருக்க மற்றொரு புறம், தமிழகத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடையே வழங்கப்படும் ஊதியத்திலேயே முரண்பாடுகள் உள்ளன. தமிழகத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையே 2008-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கும் 2009-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கும் இடையேயான ஊதிய முரண்பாடுகளே 13,000 ரூபாய் அளவுக்கு உள்ளது. ஊதிய முரண்களைத் தொடர்ந்து மற்றொரு கோரிக்கையாக முன்வைப்பது 2003-ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பழைய ஓய்வூதிய முறையையே மீண்டும் தொடர வேண்டும் என்றும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வலியுறுத்துகின்றனர்.


இதற்கு முன்னர் ஆசிரியர்கள் இதே மாதிரியாகப் போராட்டங்களில் ஈடுபட்ட போது, தமிழக அரசு அவர்களின் தனி ஊதியம் என்ற முறையில் வழங்கி வந்த 500 ரூபாயோடு 250 ரூபாய் அதிகமாக்கி 750 ரூபாயாக வழங்கியது. அதற்குச் சம்மதம் தெரிவித்து சில அமைப்புகள் தங்களின் போராட்டங்களைத் திரும்பப் பெற்றன. இப்போது இந்த ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்ய போராட்டம் நடத்தும்போது, அரசுத் தரப்பில் இந்த 250 ரூபாய் உயர்த்தி வழங்கியதைக் கூறி இந்தப் பிரச்னைகளில் கவனம் செலுத்த மறுக்கின்றனர்.

இதுகுறித்து போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியைச் சார்ந்த ஆனந்த்-யிடம் பேசியபோது, ``சமூகத்தில் ஆண், பெண் வேறுபாடுகளின்படிதான் ஊதியம் வழங்கப்படுகின்றது. அரசுத் துறையில்தான் பாலின வேறுபாடுகளைப் பார்க்காமல் சம ஊதியம் வழங்கப்படும் நிலை  நடைமுறையில் உள்ளது. அதே வேளையில், அரசு கடைப்பிடிக்கும் சில தவறான நடைமுறைகள் சம வேலைக்கு வேறுபட்ட ஊதியத்தை வழங்கி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையில் ஒன்றான சமத்துவத்தில் கைவைக்கின்றது” என்றார்.


ஏற்கெனவே டிசம்பர் 4-ம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், நீதிபதிகள் வரும் 10-ம் தேதி வரை போராட்டங்களுக்குத் தடைவிதித்துள்ளனர்.

இதுபற்றிப் பேசிய தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் முன்னாள் தலைவர் மோசஸ், ``இந்த அரசு, போராட்டங்களுக்கும் ஊழியர்களுக்கும் எதிரான அரசாகவே செயல்பட்டு வருகின்றது. அரசு தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழியர்களின் போராட்டங்களைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவரும், `ஏன் ஒரு வருடமாக ஊழியர்களின் பிரச்னைகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ எனத் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கான பதிலைத் தமிழக அரசிடமிருந்து பெறத்தான் போராட்டங்களைத் தள்ளி வைத்துள்ளனர். தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்துள்ளதாகத்தான் கருதுகிறோம்” என்றார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான பிரச்னையில், மாநில அரசு சமத்துவத்தை நோக்கி நகர வேண்டியது கட்டாயம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive