மாணவர்கள் அமெரிக்கா, லண்டன் சென்று படிக்க வேண்டியதில்லை. இங்குள்ள குக்கிராமத்தில் படித்த நாங்கள் வெற்றியைப் பெற்றிருக்கும்போது , இன்றைக்கு நவீன வசதிகள் பெருகிவிட்ட நிலையில் தற்போதுள்ள மாணவர்கள் வெற்றி பெற முடியும். அறிவியல் என்பது சுயசிந்தனையில் வர வேண்டும்.
பேசும்போது நான் ஆங்கிலத்தில் பேசலாம், ஆனால் சிந்திப்பது தாய்மொழியில்தான்.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா போன்ற நாடுகளில் செயற்கைக்கோள்களை உருவாக்கி அதை நிலைநிறுத்தப் பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், நாங்கள் குறுகிய காலத்தில் செயற்கைக்கோள்களை உருவாக்கினோம். கடைசியாக ஏவப்பட்ட 3 செயற்கைக்கோள்கள் 96 நாள்களில் ஏவப்பட்டு, விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன. விண்வெளி ஆய்வில் வெற்றிகளை எட்டுவதற்காகஎன்னுடன் பணியாற்றிய சக அறிவியலாளர்கள் பலர் தாய்மொழியில் கல்வி கற்றிருந்தனர். எனவேதான், அவர்களால் சுயமாகச் சிந்திக்க முடிந்தது. நாங்கள் சுயமாகச் சிந்தித்ததும் எங்களின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது

எனவே, *தாய்மொழியில் படிப்பது பலவீனம் அல்ல*. தாய்மொழியில் படிப்பதுதான் பலம். இதை மாணவர்கள் உணர வேண்டும். தன்னிடமிருந்துதான் மாற்றம் தொடங்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறுகிறார். அப்பா, அம்மா குழந்தைகளுக்கு முன்மாதிரிகளாக இருந்தால், ஒரு நடிகரையோ, விளையாட்டு வீரரையோ குழந்தைகள் முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டியதில்லை.

ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளின் விஞ்ஞானிகள், அவரவர் தாய்மொழியில் படித்து, சிந்தித்து, முன்னேறுகின்றனர். எனவே, ஆங்கிலம் என்ற மாயை பள்ளிக்கூட, அடிப்படைக் கல்வியில் தேவையில்லை என்பதே எனது கருத்து

- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

கடந்த வாரம் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை மற்றும் வளரும் அறிவியல் இதழ் ஆகியவை இணைந்து பத்ம விருதுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்குப் பாராட்டு விழா நடத்தினர். அந்த விழாவில் மயில்சாமி அண்ணாதுரை ஆற்றிய ஏற்புரையின் சிறு பகுதி...

நன்றி தி இந்து