ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்: தினமணி ஆசிரியர்


ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 
தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்  என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.
இராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பின்னலூர் மு.விவேகானந்தனின் சஐசஉ ஈஐயஐசஉ நஞமகந  என்னும் நூலை நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் வெளியிட முதல் பிரதியை தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியது:
  குழந்தைகள் இன்று மருத்துவர், பொறியாளர் ஆக வேண்டும்  என்ற எண்ணத்தில் படித்து வருகின்றனர். பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற இலக்கை நோக்கி சமுதாயம் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கு என்ன மாற்று, எப்படி ஈடுகட்டப் போகிறோம் என்ற கேள்விக்கு ஒருவிடை இருக்கிறது. அது அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், 5- ஆம் வகுப்பு வரை ஆரம்பக் கல்வி தாய்மொழியில் மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று உறுதிப்படுத்த வேண்டும்.
 மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு  மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், எந்த குழந்தையாக இருந்தாலும், ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியில் கற்க வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும். ஆங்கில வழிக்  கல்வியில் படிக்கும்போது குழந்தைகளுக்கு நர்சரி  ரைம்ஸ் கற்றுக்கொடுக்கிறார்கள்.   ஆங்கில மொழி ஆளுமையை வளர்த்துக்கொள்ள  கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால், ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பது இல்லை.
திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்ற தமிழ் நூல்கள்தான் எப்படி நாம் இருக்க வேண்டும் என்ற ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கின்றன. எனவே தாய்மொழிக்கல்விதான் குழந்தைகளுக்கு வழிகாட்ட சரியான தீர்வு.
இராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளை மாணவர்களுக்கு வள்ளலார் பற்றிய கட்டுரைப் போட்டிகளை நடத்தி  பரிசுகளும் விருதுகளும் வழங்குவது பாராட்டத்தக்கது. இதுபோன்ற கட்டுரைப் போட்டிகளை தினமணி இணைந்து நடத்தத் தயாராக இருக்கிறது என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.

Share this