பிளஸ் 2 ஆங்கில தேர்வு; மாணவர்கள் மகிழ்ச்சி

பள்ளி கல்வியின், பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில், வினாத்தாள் நடுநிலையுடன் இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு நடந்து வருகிறது. நேற்று ஆங்கிலம் பாடத்துக்கான தேர்வு நடந்தது. இதில், 8.60 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


இதுவரை, இரண்டு தாள்களாக நடத்தப்பட்ட தேர்வு, இந்த ஆண்டு, ஒரே தாளாக நடத்தப்படுகிறது.


 எனவே, மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்வுக்கு சென்றனர்.வினாத்தாள் குறித்து, சென்னையைச் சேர்ந்த, ஆங்கில ஆசிரியர், சுரேஷ் கூறியதாவது:

சராசரி மதிப்பெண் பெறும், அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், வினாத்தாள் இருந்தது.


 சில கேள்விகள் மட்டும், சிந்தித்து, புரிதல் அடிப்படையில், விடை எழுதும் வகையில் இருந்தன. மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, வினாத்தாள் தரமாக இருந்தது.


நன்றாக படித்து தயாராகி இருந்தால், அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கலாம்.வினாத்தாளில், 10வது கேள்வி, 40வது, 47வது கேள்விகளில், வழக்கத்தை விட கூடுதல் விடைகள் கேட்கப்பட்டிருந்தன.


வழக்கமாக பத்தாம் வகுப்பில் இடம் பெறும், படம் பார்த்து விளக்கம் எழுதும் கேள்வி, மாணவர்கள் எதிர்பார்க்காத நிலையில், பிளஸ் 2வில் இடம் பெற்றிருந்தது. பெரும்பாலான மாணவர்கள் மகிழ்ச்சியுடன் எழுதும் வகையில் வினாத்தாள் இருந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.


இதற்கிடையே, நேற்று பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், திருச்சியில், ஓர் அரசு பள்ளி மாணவர், வேலுார், சென்னையில், தலா, ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் என, மூன்று பேர், முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கினர்.


பிளஸ் 1 தேர்வு இன்று துவக்கம்


பிளஸ் 1 மாணவர்களுக்கு, 2017 - 18ம் கல்வி ஆண்டில், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.


 அந்த ஆண்டில் நடந்த தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்ததால், 92.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.


அதேநேரம், சில பாடங்களில் தேர்ச்சி பெறாத, 28 ஆயிரம் பேர், படிப்பை பாதியில் கைவிட்டனர்.


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 தேர்வு, இன்று துவங்க உள்ளது. இதில், 8.16 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்;


5,032 தனி தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். மேலும், பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாமல் படிப்பை கைவிட்ட, 28 ஆயிரம் மாணவர்களும் தேர்வு எழுத, சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டை போல இல்லாமல், இந்த முறை தேர்வு எளிதாக இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.


 பிளஸ் 1 தேர்வால், மாணவர்களுக்கு, பிளஸ் 2 படிப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில், வினாத்தாள் இருக்கும் என, கல்வி துறையினர் தெரிவித்துள்ளனர்

Share this

0 Comment to "பிளஸ் 2 ஆங்கில தேர்வு; மாணவர்கள் மகிழ்ச்சி "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...