NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8-வதுவரை படித்த மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களுடன் நேரத்தை செலவிட்ட ஆட்சியர்: நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு


திருவண்ணாமலை ஆட்சியர் தான் ஆரம்பக் கல்விப்பயின்ற திருச்சியில் உள்ள மாநகராட்சிப்பள்ளிக்கு திடீர் விஜயம் செய்து 3 மணி நேரம் மாணவர்களோடு மாணவராக செலவிட்டு அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.


எந்தநிலை வந்தாலும் வந்தவழி மறவாதே என்று ஒரு பொன்மொழி உண்டு.


 இதை மனதில் நிறுத்தி வாழ்பவர்களால் அவர்களுக்கும் பெருமை, அவர்களால் மற்றவர்களுக்கும் உதவி கிடைக்கும்

இவ்வாறு நடக்கும் சிலரில் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியும் ஒருவர், அதிகாரம் செல்லுமிடத்தில் எளியோரை வதைக்காமலும், அதிகாரம் உள்ளதால் அதை வைத்து எளிய மக்களுக்கு உதவி செய்வதையும் அவ்வப்போது தனது செயல்களால் வெளிப்படுத்தி வருகிறார் கந்த சாமி.


பெற்றோரை இழந்த 19 வயது இளம்பெண் தனது தங்கை, தம்பியுடன் பாட்டி தயவில் வாழ பாட்டியும் மறைந்ததால் போக்கிடம் இன்றி உதவிக்கேட்டு ஆட்சியரிடம் மனுக்கொடுக்க அவர்களது நிலைக்கண்டு இரங்கிய ஆட்சியர் கந்தசாமி, 21 வயதுதான் அரசு வேலைக்கு தகுதி என்ற விதியை மேலிடத்தில் பேசி விலக்குப்பெற்று 19 வயது பெண்ணுக்கு வேலையைப் பெற்று அந்த ஆர்டரை கொடுத்தார்.


ஆர்டருடன் அவரது வீட்டில் சமைக்க வைத்து ஒன்றாக உணவு உண்டார். அவர்களின் இடிந்த வீடிருக்கும் நிலையைப்பார்த்து அதை மத்திய அரசின் வீடுகட்டும் திட்டத்தின் மூலம் கட்ட உத்தரவிட்டு, அந்தப்பெண்ணின் தங்கை தனியார் கல்லூரியில் கல்விப்பயில இடம் பெற்றுக்கொடுத்து கல்வி உதவியும் செய்தார்.

அவரது 15 வயது தம்பிக்கான கல்விச்செலவையும் ஏற்று பள்ளிச் சென்றுவர ஒரு சைக்கிளையும் வழங்கினார்.


 அடுக்கடுக்கான உதவிகளை கண்டு அந்த பெண் கண்கலங்கினார். கிராமமே அவரை வாழ்த்தியது.


 இதேபோன்று சமீபத்தில் சொத்துப்பிரச்சினையில் சொந்தப் பெரியப்பாவால் கொடுமைப்படுத்தப்பட்ட சிறுமி மற்றும் அவரது தம்பி தங்கைகளை அரசு விதியின்கீழ் தத்தெடுத்து சொத்துக்களை மீட்டு அவர்களையும் காப்பகத்துக்கு அனுப்பி காப்பாற்றினார்.

இந்நிலையில் தான் கல்விப்பயின்ற திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு திடீர் என வருகைத்தந்தார்.


 இப்பள்ளி திருச்சியில் உள்ள மேல கல்கண்டார் கோட்டை என்ற ஊரில் உள்ளது . இதில் தனது ஆரம்பக் கல்வியை  ஆட்சியர் படித்தார்.


 1 முதல் 8-ம் வகுப்பு வரை இங்கு படித்தார்.

தற்போது திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக இருந்தாலும் அவரது ஆரம்ப கல்வியை ஊட்டிய பள்ளியை அவர் மறக்கவில்லை.


 அந்தப்பள்ளிக்கு எதையாவது செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் அவ்வப்போது உதவி செய்து வருகிறார்.


 இந்நிலையில் நேற்று திடீரென பள்ளிக்கு அவர் சென்றார்.

தன்னோடு படித்த சக மாணவனான சவுந்தரராஜன் என்பவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.


 மாவட்ட ஆட்சித்தலைவர் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் ஆசிரியர்கள் நாற்காலி அளித்தபோதும் அதை மறுத்துவிட்டு படிகட்டில் அமர்ந்துக்கொண்டு மாணவர்களை அருகில் அழைத்து ஒவ்வொரு  மாணவனையும் தனித்தனியாக பேசி அறிவுரை வழங்கி இருக்கிறார்.


இவர்களை வருங்கால தலைவர்களாக உருவாக்க ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.


பல்வேறு பணிகளிடையே தனது நேரத்தை ஒதுக்கி தன்னை உருவாக்கிய பள்ளியில் 3 மணி நேரம் செலவிட்டு மாணவர்களுக்கு நம்பிக்கை உரமிட்டு இருக்கிறார்.

அவரிடம் பேசிய மாணவர்களும் ஆட்சியர் கந்தசாமியின் பணியை பத்திரிக்கைகளில் படித்து, யூடியூப் மற்றும் தொலைக் காட்சியில் பார்த்ததையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.


 முழுக்க முழுக்க குடும்ப நிகழ்வாக எந்த விதமான கேமரா வெளிச்சமும் இல்லாமல் சத்தமில்லாமல் 3 மணி நேரத்தை செலவிட்டுள்ளார்.

தனியார் பள்ளியில் பயில்வதுதான் ஏற்றம்தரும், அரசு பள்ளி மட்டம் என்ற கருத்து மாற வேண்டும்.


 இதே அரசு மாநகராட்சி பள்ளியில் படித்த நான் ஆட்சியராகவும், என் பள்ளி தோழன் செளந்தரராஜன் தொழில் அதிபராகவும் உயர்ந்துள்ளோம்,  நாங்கள் உங்கள் முன் உள்ள உதாரணங்கள்.

நீங்களும் நம்பிக்கையுடன் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆட்சியர் கந்தசாமி மாணவர்களிடம் தெரிவித்தார்.


பின்னர் பள்ளிக்கான தேவைகள் என்ன என்பதைகேட்டு அதை செய்து தருவதாக வாக்களித்தார். அவரது நண்பரும் பள்ளிக்கு வேண்டிய உதவி செய்வதாக தெரிவித்தார்.

முடிவில் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர் கல்விக்காக, மாணவர்களின் வளர்ச்சிக்காக என்னென்ன உதவிகள் வேண்டும் என்றாலும் தயங்காமல் கேட்கலாம் என கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.


 அவரது முயற்சியால் நம்பிக்கைப்பெறும் மாணவர்கள் நிச்சயம் ஊக்கமுடன் படிப்பது உறுதி.

அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் உயர் பதவியில் இருப்பவர்கள் இதுபோன்று முன்னுதாரண நம்பிக்கையூட்டும் செயல்களை செய்தால் வளரும் இளம் தலைமுறை ஊக்கமுடன் நல்ல பாதையில் நடைபோடும் என்பது உறுதி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive