வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை ஏமாற்றும் கும்பல் அதிகரிப்பு:வேலையில்லா பட்டதாரிகள் உஷார்


நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் ரயில்வே மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பட்டதாரி இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபடும் கும்பல் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


 சமீபத்தில் துப்புரவு பணியாளர் பணிக்கு கூட பிஎச்டி படித்தவர்கள், இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக நீதிபதிகளே வருத்தம் தெரிவித்தனர்.

அந்த அளவுக்கு படித்த இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தில் இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் சூழ்நிலை உள்ளது.


 வேலைவாய்ப்பை பெருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலை தேடி அலைகின்றனர்.


 மத்திய, மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகள் பெற டிஎன்பிஸ்சி, வங்கி பணி, ரயில்வே, காவல்துறை என போட்டி மற்றும் தகுதி தேர்வுகள் எழுதி அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

 குறிப்பாக ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பேர் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து வெளியே வருகின்றனர்.


 இவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இதனால் தங்கள் படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத நிலையில் கடைநிலை உதவியாளர் பணிக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள், தனியார் ஏஜென்சிகளை வேலைவாய்ப்புக்காக நாடுகின்றனர்.


 அவர்களை குறிவைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி பல்வேறு மோசடிகள் நடந்து வருகின்றன.


அதாவது வேலை வாங்கித் தருகிறோம் எனக் கூறி பல லட்சங்களை சிலரிடம் கறப்பது, வேலையில்லாதவர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு முதலில் நீங்கள் ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும்.


அதன் பின்னர் உங்களுக்கு பணி நியமன ஆணை பெற்றுத் தரப்படும் எனக் கூறி 1000, 2 ஆயிரம் பேரிடம் குறிப்பிட்ட ஒரு தொகையை கறந்து கொண்டு எஸ்கேப் ஆகிய விடுவது போன்ற செயல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இதனால் வேலையில்லாத இளைஞர்கள் பணத்தையும் இழந்து விட்டு வேலையில்லாமல் திண்டாடும் சூழ்நிலை உள்ளது.


 இதுதொடர்பாக நெல்லை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளித்துள்னர். இவ்வாறு ஏமாற்றும் கும்பல் தங்களுக்கென ஒரு நெட்வொர்க் அமைத்துக் கொண்டு செயல்படுகிறது.


 வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறும் ஒருசில ஏஜென்சிகளிடம் இளைஞர்கள் பணத்தை கொடுத்து விட்டு ஏமாறுகின்றனர்.

நெல்லையிலும் இதுபோல் செயல்பட்டுவரும் ஒருசில ஏஜென்சிகள் மீது புகார்கள் வந்துள்ளன.


ரயில்வே, மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை கறக்கின்றனர்.

 முதற்கட்டமாக ரூ.1லட்சம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவதை நம்பி இளைஞர்கள் கடன் வாங்கியாவது பணத்தை கொடுக்கின்றனர்.


நெல்லையை சேர்ந்த மத்திய அரசு நிறுவன ஊழியர், தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ரயில்வேயில் வேலைபெற முயற்சி மேற்கொண்டார். இதற்காக ரயில்வே யில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் மூலம் லகரங்களை வழங்கினார்.


ஆனால் பணத்தை பெற்ற அதிகாரிகள், வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சிலர் கூறுகையில், வேலைவாய்ப்பிற்காக உயர் கல்வி படிப்பதுடன் நின்றுவிடாமல் போட்டித் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.


அதை விடுத்து வேலைவாய்ப்பு தருவதாக ஆசைவார்த்தை கூறும் ஏஜென்சிகள் மற்றும் முகவர்களை நம்பி ஏமாறக் கூடாது. இவ்வாறு தெரிவித்தனர்.


 இதுகுறித்து நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் கூறுகையில், படித்த இளைஞர்களை குறிவைத்து மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக சமீபகாலமாக மோசடி நடந்து வருகிறது.

அவர்களிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். படித்த இளைஞர்கள், தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.


 தனியார் ஏஜென்சிகள் மற்றும் முகவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறினாலும் அவர்களது உண்மை தன்மையை அறிந்து தீர விசாரித்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு பெற்று தருவதாக ஏராளமான மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன.

 இதுதொடர்பாக காவல்துறையில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே வங்கி மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏஜென்சிகள் மற்றும் முகவர்கள் ஆசைவார்த்தை கூறினால் அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.


 இதுதொடர்பாக இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நெல்லையில் பல்வேறு கல்லூரிகளில்காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Share this

0 Comment to "வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை ஏமாற்றும் கும்பல் அதிகரிப்பு:வேலையில்லா பட்டதாரிகள் உஷார் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...