பள்ளி மாணவர்களின் கணிதத் திறமையை வளர்க்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மாமல்லபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான 3 நாள் மேலாண்மை நிர்வாகப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, முகாமைத் தொடங்கி வைத்தனர். மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தலைமை வகித்தார்.
பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் வரவேற்றார். அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநர் வெ.இறையன்பு, பள்ளிக் கல்வித் திட்ட கூடுதல் இயக்குநர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பணி நடைமுறை, ஒழுங்கு நடவடிக்கை மேல்முறையீட்டு விதிகள், மனிதவள மேம்பாடு , தகவல் பெறும் உரிமைச் சட்டம், நேர் மேலாண்மை , மனஅழுத்த மேலாண்மை ஆகிய தலைப்புகளில் கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக பள்ளி மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சர்வே ஒன்றின் அடிப்படையில் அவர்களுக்கு கணிதத்தைக் கற்பதிலும், கற்றதை வெளிப்படுத்துவதிலும் திறமை குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கூட கணிதத்தில் தடுமாறுகின்றனர். இதற்காக பள்ளி அளவிலேயே மாணவர்களின் கணிதத் திறமையை வளர்க்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக ஆஸ்திரேலியாவின் சிறப்பான எளிய கணிதம் போதிக்கும் முறை கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் போடி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இந்தக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் இந்தக் கல்வி முறையில் கணிதப்பாடம் சொல்லித் தரப்படும். அண்மையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரை சந்தித்தபோது தமிழகத்தின் கல்வித்துறையை மேம்படுத்தத் தேவையான கூடுதல் நிதி ஆதாரங்களை கேட்டுள்ளோம். தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மாணவர்களை அதற்குத் தயார் படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறோம். எதிர்காலத்தில் நீட் போன்ற எந்த நுழைவுத்தேர்வு வந்தாலும் தமிழக மாணவர்கள் அதை எதிர்கொள்வார்கள் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...