புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குளத்தூரில் ஒரு மாணவரே பயின்று வந்த அரசுப் பள்ளி நேற்று மூடப்பட் டதை எதிர்த்து, தனியார் பள்ளி களில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்த்து, பள்ளியை தொடர்ந்து செயல்படச் செய்வது என ஊர் மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
குளத்தூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வருடாபிஷேகத்தைத் தொடர்ந்து, ஊர் மக்கள் சுபிட்சமாக இருக்க முதல் முறையாக திருவிளக்கு பூஜை நடத்துவதற்காக நேற்று ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அனைவரும் விளக்கும் கையுமாக காணப்பட்டனர்.அதேசமயம், கோயிலுக்குச் செல்லும் வழியில் கடந்த 1968-ம் ஆண்டில் இருந்து இயங்கி வந்த அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே பயின்றுவந்த நிலையில் நேற்று மூடப்பட்டது. பள்ளியை மூடிவிட்டு கனத்த இதயத்தோடும், கண்ணீரோடும் புறப்பட்டார் தலைமை ஆசிரியை. இந்தப் பள்ளியில் பொது நூலகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.இந்த தகவல் ஊரெங்கும் பரவியது. கோயிலில் விளக்கு பூஜைக்கான முன்னேற்பாடு பணியில் ஈடுபட்டிருந்த ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரும் உடனே, கோயில் வளாகத்தில் ஒன்றுகூடி விவாதித்தனர்.அப்போது, குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்து மாணவர்களையும் உள்ளூர் அரசு தொடக்கப் பள்ளியி லேயே சேர்ப்பது. பள்ளியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து ஊர் பிரமுகர் துரைராஜ், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தனியார் பள்ளிகளில்மாணவர்களைச் சேர்த்ததால் இந்தப் பள்ளியில் மாணவர்கள் யாரும் சேரவில்லை. ஆசிரியரும் வீடுவீடாகச் சென்று முயற்சி செய்தும் பலனில்லை. மாணவர்களைச் சேர்க்காவிட்டால் பள்ளியைப் பூட்டப் போவதாக தெரிவித்தார்கள். ஆனால், திடீரென மூடிவிடுவார்கள் என்பதை கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
ஊருக்குள் கோயில் கட்டியதை பெருமையாக கருதும் நாங்கள் பள்ளிக்கூடத்தை மூடுவதை அவமானமாகக் கருதுகிறோம். இந்த நிலை உருவானதற்காக எதிர்கால சந்ததியினர் எங்களைக் குறைகூறுவார்கள்.எனவே, இந்த ஊரில் இருந்து தனியார் உள்ளிட்ட பிற பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களை இதே பள்ளியில் சேர்த்துப் பள்ளியை மேம்படுத்துவது என ஊர் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.
இது தொடர்பாக அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். தொடர்ந்து இந்தப் பள்ளி இதே ஊரில் இயங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...