Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai

'நீட் - ஜே.இ.இ., தேர்வுகளை மேலும் தாமதித்தால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்' என, பிரதமருக்கு, 150க்கும் அதிகமான கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான, அகில இந்திய நுழைவுத் தேர்வான, 'நீட்' செப்டம்பர், 13ம் தேதியும்; பொறியியல் படிப்புகளுக்காக, ஜே.இ.இ., மெயின் தேர்வுகள், செப்டம்பர், 1 - 6ம் தேதி வரையிலும் நடக்க உள்ளன. இதற்கிடையே, கொரோனா பரவல், நாடு முழுதும் அதிகரித்து வருகிறது. இதனால், இரண்டு தேர்வுகளையும் தள்ளி வைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளன.ஆனால், 'தேர்வுகள் திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும்' என, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை நடத்தும், என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.இந்நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த, 150க்கும் அதிகமான கல்வியாளர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜே.இ.இ., மெயின் மற்றும் நீட் தேர்வுகளை மேலும் தள்ளி வைப்பது, மாணவர்களின் எதிர்காலத்தை விட்டுக் கொடுப்பதாக அமையும்; அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.


அரசியல் லாபத்துக்காக சிலர், மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகின்றனர். இதற்காக அரசை எதிர்க்கின்றனர். கொரோனா பரவலால், மாணவர்களின் எதிர்காலம், நிச்சயமற்ற சூழலுக்கு மாறியுள்ளது. மாணவர்கள் சேர்க்கை குறித்தும், வகுப்புகள் குறித்தும், நிறைய அச்சங்களை காண முடிகிறது. இவை, விரைவில் சரிசெய்யப்பட வேண்டும்.


லட்சக்கணக்கான மாணவர்கள், பிளஸ் 2 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த அடி எடுத்து வைக்க, ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடவடிக்கைஇந்நிலையில், நீட் - ஜே.இ.இ., தேர்வுகளை நடத்துவதில், மீண்டும் தாமதம் செய்தால், மாணவர்களுக்கு ஓராண்டு முழுதும் வீணாக வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு, நீட் - ஜே.இ.இ., தேர்வுகளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் என, உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு, அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியதாவது: கொரோனாவை கட்டுப்படுத்த, ஒடிசா அரசு போராடி வருகிறது. தொற்றுப் பரவலுக்கு மத்தியில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவது கடினம். மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில், கன மழையால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, நீட் - ஜே.இ.இ., தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது: ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பித்த, 8.58 லட்சம் மாணவர்களில், 7.5 லட்சம் பேர், கடந்த, 24 மணி நேரத்தில், 'ஹால் டிக்கெட்டு'களை பதிவிறக்கம் செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த, 15.7 லட்சம் பேரில், 10 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளதாக, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், தேர்வு நடப்பதையே மாணவர்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது. மேலும், தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டாம் என, மாணவர்கள், பெற்றோர் பலர், 'இ - மெயில்' வழியாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஜே,இ.இ., தேர்வு மையம், 570ல் இருந்து, 660 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான மையங்களின் எண்ணிக்கையும், 2,546ல் இருந்து, 3,842 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் கூறினார்.பா.ஜ., பொதுச் செயலர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது: நீட் - ஜே.இ.இ., தேர்வுகளை வைத்து, அரசியல் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது. இது, மாணவர்களின் எதிர்காலத்தில் காங்கிரசுக்கு அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது. மாணவர்களுக்கு ஓராண்டு வீணாவது, அவர்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை, மத்திய அரசு அனுமதிக்காது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், தேர்வுகளை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுஉள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Bot

RWF

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments