++ பள்ளி திறந்ததும் முதல்ல இத செய்யணுமா? - Padasalai's Special Article ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
பள்ளி திறந்ததும் முதல்ல இத செய்யணுமா? - Padasalai's Special Articleபள்ளித்திறப்பு மகிழ்ச்சியான நிகழ்வாக மாற . . .

 

            டிசம்பர் (20), ஜனவரி (20), பிப்ரவரி (20), மார்ச் (20), ஏப்ரல் (20), மே (20) ஆகிய ஐந்து மாதங்களில் 120 நாட்கள் பள்ளி இயங்குவதாகக் கொண்டால் 50 சதவீத பாடங்களை கற்பிக்க இயலும்.

            ஒவ்வொரு பாடத்திலும் இக்கல்வியாண்டிற்கு மட்டும் குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளை விரைவாக வெளியிட வேண்டும்.

            பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஆகிய மூன்று வகுப்புகளுக்கு மட்டும் பள்ளியில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மாணவ, மாணவியர்களை ஏதேனும் இரண்டு பிரிவுகளாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிக்கு வரவழைக்கலாம்.

            ஆசிரியர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒரு குழுவும், அடுத்த மூன்று நாட்களுக்கு அடுத்த குழுவும் பள்ளிக்கு வரவழைக்கலாம். தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆசிரியர்கள் ஒரு குழுவாகவும், கணக்கு, அறிவியல் ஆசிரியர்கள் மற்றொரு குழுவாகவும், ஆசிரியர்கள், தலைமையாசிரியர் ஆலோசனையின் அடிப்படையில் பிரித்துக்கொள்ளலாம்.

            ஆசிரியர்கள் இரு குழு மாணவர்களுக்கும் தனித்தனியே பாடங்கள் கற்பிக்க வேண்டியுள்ளதால், மெல்ல கற்கும் மாணவ, மாணவியர்களை ஒரு குழுவாகவும், வேகமாக கற்கும் மாணவ, மாணவியர்களை மற்றொரு குழுவாகவும் பிரித்துக்கொண்டால், கற்பித்தலும், கற்றலும் முழுமையாக நடைபெற ஏதுவாக இருக்கும். கற்றலில் தோய்வும் ஏற்படாது.

            வசதி வாய்ப்புள்ள அதாவது தொலைக்காட்சி வசதி உள்ள பெற்றோர் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லையெனில், அவர்களுக்கு தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களை வீட்டிலிருந்தபடியே கவனிக்க அறிவுறுத்தலாம். வாரம் அல்லது பத்து நாட்களுக்கு அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை பள்ளிக்கு வந்து சிறு, குறு தேர்வுகள் எழுதலாம். அத்தகைய மாணவ, மாணவிகளை குறிப்பிட்ட நேரத்தில் ஒரு அல்லது இரு மணி நேரத்திற்கு மட்டும் வந்திருந்து, தேர்வு முடிந்தவுடன் பள்ளியை விட்டுச் செல்ல கால அட்டவணை அமைத்துத் தரலாம்.

            வசதி வாய்ப்பற்ற அதாவது தொலைக்காட்சி வசதி இல்லாத பெற்றோர் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி ஒன்று விட்டு ஒரு நாள் பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்ற அனுமதிக்கலாம்.

            பள்ளியின் மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்குத் தக்கவாறு மூன்று அல்லது நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பள்ளிக்கு வரவழைக்கலாம்.

            ஆரம்ப நாட்களில், அவர்களையும் கூட காலை அல்லது மதியம் ஏதேனும் ஒரு வேளை மட்டும் பள்ளிக்கு வரவழைக்கலாம். அவர்களின் ஆரோக்கியத்திற்கு, பாதுகாப்பிற்கு செய்ய வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளையும் செவ்வனே செய்யலாம். இவ்வாறு இரு வாரங்கள் செயல்படுத்தி, பின்னர் விரிவுபடுத்தலாம். இதற்கு பெற்றோர், ஆசிரியர், மாணவ, மாணவியர் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இவ்வாறு திட்டமிட்டு செயல்படுவதால், பெருந்தொற்று நிகழாமல், கற்றல், கற்பித்தல் நிகழ்வை நடைமுறைப்படுத்த இயலும்.

           

            மாணவர்களின் கற்றல் திறனை ஒப்படைப்புகள், குறுந்தேர்வுகள், சிறுதேர்வுகள், ஆன்லைன் தேர்வுகள், . . . மூலம் செம்மைபடுத்த இயலும்.

 

            ஒரு மணிநேர வகுப்பாக காலை 10 மணி முதல் 1.00 மணி வரை மூன்று பாடவேளைகளும், மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை இரு பாடவேளைகளாகவும், மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பயிற்சி வகுப்பாகவோ, கல்விசார் பணிகளுக்காவோ, தேர்வு நேரமாகவோ பள்ளி இயக்கத்தை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

 

            ஆசிரியர்களுக்கு முப்பது நாட்களுக்கு கணிப்பொறி பயன்படுத்துதல், கற்றலை மேம்படுத்த பணிதாள் தயாரித்தல், கல்வி கற்க உதவும் துணைப்பொருட்கள் தயாரித்தல், . . . ஆகியவற்றில் குறுவள மையத்தில் பணியிடைப் பயிற்சி அளிக்கலாம்.

            உயர்நிலைப் பள்ளிகளுக்கு பத்து கணிப்பொறிகளும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு இருபது கணிப்பொறிகளும் வழங்கப்பட்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் செயல்பட்டு வருகின்றன. கணிப்பொறிகளில் இதுவரை தொலைக்காட்சிகளில் கற்பிக்கப்பட்ட ஒலி ஒளி கோப்புகளை பதிவு செய்து மாணவர் பார்க்க, கற்க வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

            ஆனால் அதைத் திறம்பட செயல்படுத்த ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் ஒரு கணினி ஆசிரியர் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கணினி ஆசிரியர் இல்லாத உயர்நிலைப் பள்ளிகளுக்கு பணியிடம் வழங்கப்பட்டு, ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஸ்மார்ட் வகுப்பறைகள் முழுமையான பயன்பாட்டில் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும்பொழுது அவை செயலிழக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, அவற்றை சீராக இயங்க வைக்கவும், செயல்பட வைக்கவும் கணினி ஆசிரியர் அவசியம்.

            கணினி ஆசிரியர் பணியிடம் வழங்கவோ அல்லது பணியமர்த்தவோ வாய்ப்பில்லாத சூழல் நிலவுமேயானால், அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு கணிப்பொறிகளை மேலாண்மை செய்யும் வகையில் தேவையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அல்லது கணினி ஆசிரியர் இல்லாத பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளியிலிருந்து வாரத்திற்கு இரு நாட்கள் மாற்றுப்பணி வழங்கிட வேண்டும்.

 

            இக்கல்வியாண்டில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இப்பாடப்பகுதிகளில் மட்டும் வினாக்கள் அமைதல் வேண்டும். சென்ற கல்வியாண்டுகளில் கல்வி கற்றவர்களுக்கு முழு பாடப்பகுதியிலும் வினாக்கள் அமைதல் வேண்டும்.

 

 இப்படி இருந்தால் நலமாக இருக்கும் எனும் ஆலோசனை தானே தவிர அறிவுரை அல்ல.

 

அரசின் நல் முடிவுக்காக காத்திருப்போம்.

சிவ . ரவிக்குமார், கல்வியாளர்.

 

 

 


 

 

 

 

Categories:

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...