பள்ளிகளுக்கான அங்கீகாரம்: முழுமையாக டிஜிட்டல் மயமாக்க சிபிஎஸ்இ முடிவு.

1611756687375
 பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் குறைவான மனிதவளம் இருந்தால் போதும். இந்தத் திட்டம் மார்ச் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில், 24 ஆயிரத்து 930 பள்ளிகள் பதிவு செய்துள்ளன. இவற்றில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அதேபோல 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளிகளுக்கான விதிமுறைகள் கடந்த 1998-ம் ஆண்டு முதல் முறையாக உருவாக்கப்பட்டன. பின்னர் 2018-ல் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.இந்நிலையில் தற்போது புதிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் த்ரிபாதி கூறியுள்ளதாவது:

''பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நடைமுறையை, 2006-ல் அறிமுகம் செய்தோம். தற்போது புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.


இதன்படி விண்ணப்பத்தைப் பரிசீலித்து, அங்கீகாரம் அளிக்கும் நடைமுறைகளில், மனிதத் தலையீடு மிகவும் குறைவாகவே இருக்கும். குறைந்த அரசுத் தலையீடு, அதிக நிர்வாகம், தானியங்கி செயல்பாடு, வெளிப்படைத் தன்மை என்ற மத்திய அரசின் கொள்கைப்படி இந்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்கள் அளிப்பதற்கான காலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விளக்கம் விரைவில் வெளியிடப்படும்.

அங்கீகாரம் கோரி புதிய பள்ளிகள் விண்ணப்பிக்கவும், ஏற்கெனவே இயங்கும் பள்ளிகள் தரம் உயர்த்துவதற்கும் மார்ச், ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் மூன்று முறை அவகாசம் அளிக்கப்படும். அங்கீகாரத்தை நீட்டிக்க, மார்ச் 1 முதல் மே 31 வரை பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்.''

இவ்வாறு அனுராக் த்ரிபாதி தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive