கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வி கற்க மத்திய அரசு, இலவசக் கல்வி, நிதியுதவி உள்ளிட்டவற்றை அறிவித்தது. குறிப்பாக 10 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ குழந்தைக்குச் சேர்க்கை வழங்கப்படும். குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால், கல்வி உரிமைச் சட்டத்தின்படி பிஎம் கேர்ஸில் இருந்து கட்டணம் செலுத்தப்படும். சீருடை, பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கான செலவையும் பிஎம் கேர்ஸ் ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல 11-18 வயதுடைய குழந்தைகளுக்கு சைனிக் பள்ளி, நவோதயா பள்ளி போன்ற உண்டு- உறைவிட மத்திய அரசுப் பள்ளிகளில் குழந்தைக்குச் சேர்க்கை வழங்கப்படும். குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால், கல்வி உரிமைச் சட்டத்தின்படி பிஎம் கேர்ஸில் இருந்து கட்டணம் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல மாநில அரசுகளும் கல்வி உதவிகளை அறிவித்தன.
இந்நிலையில் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களிடம் தேர்வு, பதிவுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிஎஸ்இ, தம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு முடிவொன்றை 2021- 22ஆம் கல்வி ஆண்டில் எடுத்துள்ளது.
அதன்படி கரோனா தொற்று நோயால் பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது உழைக்கும் நிலையில் இருந்த பெற்றோர் ஒருவர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர் அல்லது தத்தெடுத்துக்கொண்ட பெற்றோரை இழந்த மாணவர்களின் பொதுத் தேர்வுக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தைப் பள்ளிகள் வசூலிக்கக் கூடாது.
10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களின் பட்டியலை வழங்கும் பள்ளிகள், இதுகுறித்த தகவலை முன்கூட்டியே பரிசோதித்து உரிய தகவல்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...