நேற்று 15.05.2022(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணிக்கு திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சட்ட மன்ற அலுவலகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆறு சங்கங்களின் பொதுச் செயலாளர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் தொடக்கக் கல்வியை சீரழித்து வருகிற அரசாணை எண்: 101,108 ஐ உறுதியாக ரத்து செய்து அறிவித்திட வேண்டும். ஆணையர் பதவியை விடுவித்துவிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். நிதி ஆதாரம் இல்லாத அரசாணை எண்:101,108 உடன் ரத்து செய்து அறிவித்திட வேண்டும். ஆணையர் பதவியை உடனடியாக விடுவித்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள். அமைச்சர் அவர்கள் உத்தரப்பிரதேச கல்வி முறையினை எப்படி தமிழ்நாட்டில் புகுத்தினார்கள்? என்று அலுவலர்களிடம் கேட்டேன். அவர்கள் விளக்கம் சொன்னார்கள். நானும் ரத்து செய்வதில் தீவிரமாக உள்ளேன். இருப்பினும் தடை ஏற்பட்டு வருகிறது என்றார்.இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு அரசாணை எண்:101,108 இரத்து செய்யப்பட வேண்டும் என்று அனுமதி கேட்டு நிச்சயம் அறிவித்து விடுகிறேன். ஒருவேளை அறிவிப்பு இல்லை என்றால், போராட்டம் நடத்துவது பற்றி நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று தெரிவித்தார்.அமைச்சர் அவர்களுடைய பேச்சுவார்த்தைக்கு பின்பு டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமர்ந்து பேசி ஒரு தெளிவான முடிவினை எடுத்துள்ளோம். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடைய வெளிப்படைத் தன்மையான பேச்சு வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து 18.5.2022 அன்று மாவட்டத் தலைநகரில் நடத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டமானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. ஒருவேளை 18ஆம் தேதிக்குள் அறிவிப்பு வரவில்லை என்றால் உடன் டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தினை நடத்தி உடன் தேதியை அறிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முழு கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தினை மாவட்டத் தலைநகரங்களில் நடத்துவது என என்பதை உறுதியாக முடிவெடுத்து அறிவித்துள்ளோம்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடைய பேச்சுவார்த்தையில் அவரது எதார்த்த நடைமுறையினை ஒளிவுமறைவின்றி எடுத்து வைத்துள்ளார். உயர் அலுவலர்கள் மட்டத்தில் தடையாக உள்ளது என்பதையும் எடுத்து கூறினார். அதுமட்டுமல்லாமல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாணை 101,108 ரத்தாகி விரைவில் ஆணை வெளியிடப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை வெளியிடுவதில் தாமதம் ஆனால் வலுவான ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுடைய உறுதியான ஒத்துழைப்பு கோரிக்கைகளை உறுதியாக வென்றெடுக்கும்.
திட்டமிட்டபடி 14.5.2022 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆர்ப்பாட்டம் வலுப்பெற முடிவெடுத்து அறிவித்துள்ள இணைப்பு சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்களை டிட்டோஜாக் மாநில அமைப்பின் சார்பில் உளமாற பாராட்டுகிறோம். வாய்ப்பு வரும்போது தொடரட்டும் உங்களின் போர்க்களப்பணி..
ஓங்கட்டும்!! ஓங்கட்டும்!! டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் ஒற்றுமை ஓங்கட்டும்!!
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுவிற்காக.!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...