அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அடுத்த ஆண்டு என்ன படிக்க விரும்புகிறார்கள் என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை திரட்டுகிறது. இதைத் தொடர்ந்து, அம்மாணவர்கள் சேர விரும்பும் படிப்புகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ‘நான் முதல்வன்' போர்டலில் பதிவேற்றம் செய்ய முடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வு முடித்து தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் மேற்படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி பல்வேறு புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் ஏற்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மாணவர்கள் தங்கள் விருப்பப் பாடப்பிரிவை தேர்வுசெய்ய தேவையான திறன்களை வளர்த்து அடுத்த ஆண்டு தாங்கள் படிக்க விரும்பும் ஏதேனும் 3 உயர்கல்வி பாடப்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்வுசெய்த உத்தேச பாடப்பிரிவுகளை பள்ளிக்கல்வித்துறையின் ‘நான்முதல்வன்' இணையதள போர்டலில் பதிவேற்றம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
இதற்கென அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் மற்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. அதன் விவரம் பின் வருமாறு:
# அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, மீன்வளம், கலை அறிவியல் மற்றும் பிற கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் சார்ந்த விவரங்களை கொண்ட விளக்கவுரையை (Brochure) சம்பந்தப்பட்ட கல்லூரியில் பெற்று அதை பள்ளியின் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
உயர்கல்வி வாய்ப்புகள்
# அனைத்து பள்ளிகளிலும் உள்ள உயர்கல்வி வழிகாட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியின்போது வழங்கப்பட்ட விவரங்களையும் அதுதொடர்பான வீடியோ காட்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கி அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
# உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பான அனைத்து வீடியோ காட்சிகளும் நான் முதல்வன் போர்டலில் (https://naanmudhalvan.tnschools.gov.in)பதிவேற்றம் செய்யப்படும். தற்போது,பொறியியல், மருத்துவம், கலை அறிவியல், கட்டிடக்கலை, சட்டம்மீன்வளம், கால்நடை மருத்துவ படிப்புகள் தொடர்பான வீடியோகாட்சிகள் பதிவேற்றம் செய்யப்ப்பட்டுள்ளன. இந்த வீடியோ காட்சிகளை பள்ளிகளில் இயங்கும் உயர்தொழில்நுட்ப ஆய்வக கணினிகளை பயன்படுத்தி மாணவர்களை காணச் செய்ய வேண்டும். அதில்உள்ள விவரங்களை குறிப்பெடுத்துக்கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
# தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் (ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்றவை), அகில இந்தியநுழைவுத்தேர்வுகள், அறிவியல் படிப்புகள், பொறியியல், மருத்துவ படிப்புகள்,கலைப்புல படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு எளிமையாக சொல்லவேண்டும். இதன்மூலம் அம்மாணவர்கள் பிளஸ் 2-க்கு பிறகுதங்கள் விருப்பத்துக்கு ஏற்ற படிப்பை தேர்வுசெய்ய இயலும்.
# மேலும், மேற்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். டிசம்பர் 7 மற்றும் 9-ம் தேதியில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதன் பின்னரே மாணவர்களின் விருப்ப பாடங்கள் தொடர்பான விவரங்களை பெற வேண்டும்.
புதிய திட்டம் அறிமுகம்
# அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அவர்களை அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் (Exposure visit) வரும் ஜனவரியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பான விவரங்கள் பின்னர் வழங்கப்படும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...