கல்வி ஆண்டின் இடையில் இடமாற்றம்: ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் எதிர்ப்பு

பணி நிரவல் என்ற முறையில், கல்வி ஆண்டின் இடையில், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு, 'ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில், ஒவ்வொரு நாளும், பல்வேறு நிர்வாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதன்படி, இந்த கல்வி ஆண்டில் இரண்டாம் முறையாக, பணி நிரவல் என்ற உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வி இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், அதன் பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட், பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமாரிடம் மனு அளித்துள்ளார்.
அதன் விபரம்:

அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான உபரி பணியிட மாறுதலை வரும், 9ம் தேதி முதல் நடத்த, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. அனைத்து உயர்நிலை பள்ளிகளிலும், குறைந்தபட்சம் ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

ஆனால், கடந்த காலங்களில் எட்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தன. எனவே, மீண்டும் குறைந்த பட்ச ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆறு முதல், 10ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் ஏழு பணியிடங்களாவது வழங்க வேண்டும். அதுவரை பணி நிரவல் நடத்தக் கூடாது.

இந்த ஆண்டு மார்ச்சில், உபரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் நடத்தப் பட்டது. நடப்பு கல்வி ஆண்டில், கூடுதல் மாணவர் சேர்க்கை நடந்த பள்ளிகளுக்கு, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், கூடுதல் ஆசிரியர் தேவை என, பணியிடங்கள் வழங்கப்பட்டன.

இந்த நடவடிக்கை முடிந்து ஓராண்டு கூட முடியாத நிலையில், மீண்டும் உபரி ஆசிரியர் பணி மாறுதல் நடத்துவது தவறான நடைமுறை.

ஏற்கனவே வழங்க வேண்டிய முதுநிலை ஆசிரியர், உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை இன்னும் வழங்கவில்லை. இந்த பதவி உயர்வை வழங்கிய பிறகே, பணி நிரவல் செய்ய வேண்டும்.

கல்வி ஆண்டின் இடையில், பணி நிரவல் என்ற இடமாறுதல் செய்தால், மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும். எனவே, அடுத்த கல்வி ஆண்டில், ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தும் முன் வரை, பணி நிரவலை தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive