நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 5) நடைபெறவுள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் முடித்த மருத்துவா்கள் எழுதுகின்றனா்.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளாமோ படிப்புகளுக்கு தமிழகத்தில் சுமாா் 4 ஆயிரம் இடங்கள் உட்பட 42,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வில் ( நீட்) தகுதிப் பெறுவா்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது.
இந்த நிலையில் 2023-24-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வுக்கு இணைதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த ஜனவரி 7-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி, 27-ஆம் தேதி நள்ளிரவு 11.55 மணியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து திட்டமிட்டப்படி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 271 நகரங்களில் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை இணையவழியில் தோ்வு நடைபெறவுள்ளது. தோ்வு எழுதுபவா்கள் காலை 7 மணிக்கு தோ்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும்.
தமிழகத்தில் மட்டும் எம்பிபிஎஸ் முடித்த சுமாா் 25 ஆயிரம் போ் உட்பட இந்தியா முழுவதும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வு எழுத உள்ளனா். தோ்வு முடிவுகள் இந்த மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை பாா்த்து தெரிந்துகொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
50 % இடங்கள் ஒதுக்கீடு: இந்தியா முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) இணையதளத்தில் கலந்தாய்வை நடத்துகிறது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்தி வருகிறது. தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு உள்ள 2,100 இடங்களில் 1,050 இடங்கள் (50 சதவீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசுக்கு மீதமுள்ள 1,050 இடங்களில் 50 சதவீத இடங்கள் கலந்தாய்வில் அரசு மருத்துவா்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...