தமிழக காவல்துறைக்கு 500 சப் - இன்ஸ்பெக்டர்கள் , 3,200 காவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவர் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
தமிழக காவல்துறைக்கு 500 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3,200 காவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும், ராமஜெயம் கொலை வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
விளையாட்டு போட்டிகள்
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் 62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போட்டிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கடந்த ஆண்டு 10 ஆயிரம் காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 3,200 போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 1,000 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு 444 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி தொடங்கியுள்ளது. இன்னும் 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் 10 சதவீதம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஒலிம்பிக் ஆக்கி
1956, 1960-ம் ஆண்டுகளில் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் ஆக்கி போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. அதில் இரண்டு வீரர்கள் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பது சிறப்புமிக்கது. 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியம் என்ற காவலர் இந்திய அணியின் சார்பாக 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கு கொண்டார். சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாகநாதன் என்ற காவலர் இந்திய அணி சார்பில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரிலே ஓட்டத்தில் கலந்து கொண்டார் என்பதை பெருமைக்குரியதாக தமிழ்நாடு காவல்துறை கருதுகிறது. 2020-ம் ஆண்டு நடந்த மாநிலங்களுக்கு இடையேயான காவல்துறை போட்டியில் தமிழக காவல்துறை 5 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப்பதக்கம், 5 வெண்கலப் பதக்கம் என 14 பதக்கங்களை பெற்று இந்தியாவிலேயே 2-வது இடத்தை பெற்றது.
இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...