தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக, கடந்தாண்டு, 10 மாவட்டங்களில், உண்டு உறைவிட வசதியுடன் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
நடப்பாண்டில் கூடுதலாக, 16 மாதிரி பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.
மற்ற பள்ளிகளில் சிறப்பாக படித்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கல்வியாண்டு முதல் ஒன்பது, 10ம் வகுப்பு மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர். இவர்களுக்கு வகுப்பு கையாள, அந்தந்த மாவட்டத்தில், பல்வேறு அரசு பள்ளிகளில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
இவர்கள் பணியாற்றிய அரசு பள்ளிகளுக்கு, தற்காலிக ஆசிரியர் நியமித்து, பாடம் நடத்தப்படுகிறது.
நிரந்தர ஆசிரியர் இல்லாததால், தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், ''மாதிரி பள்ளிகளுக்கு சிறந்த ஆசிரியர்கள் நியமிப்பது, அரசின் கொள்கை முடிவு.
''இதற்காக, அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளுக்கு, தற்காலிக ஆசிரியர்கள் நியமித்துள்ளதால்,மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
''தற்காலிக ஆசிரியர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்படுவதால், சிறப்பு வகுப்பு எடுப்பது, கல்வியில் பின்தங்கியோருக்கு கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்த முடியாது. தேர்ச்சி சதவீதம் சரிந்தாலும், அவர்களால் பொறுப்பேற்க முடியாது. அடுத்த கல்வியாண்டில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...