சமீபத்தில் வெளியான கல்வி தரப்பட்டியலில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு 14வது இடத்தில் இருக்கிறது. 19.03.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கான தேர்வு பொதுத் தேர்வு போல் நடத்தப்பட வேண்டுமா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை என்று ஐபெட்டோ அகில இந்திய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா.அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து வினாத்தாள்கள் சீலிட்டு வருவதும், அதை முதல் நாள் தலைமை ஆசிரியர்கள் வாங்கி மந்தனத் தன்மையுடன் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதும், தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் முன்னிலையில் 10 நிமிடத்திற்கு முன்பு தான் வினாத்தாள் சீல் உடைக்கப்பட வேண்டும் என்பதும், அதன் பிறகு தான் கற்போர் தேர்வு எழுத வேண்டும் என்றெல்லாம் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் கற்போர் யார்? என்பதை முதலில் நாம் பார்க்க வேண்டும். அவர்களைத் தேர்வு செய்வதற்கு தலைமை ஆசிரியர்கள் பட்ட துயரங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். 15 வயதிற்கு மேற்பட்ட அறவே எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு நடைபெறும் தேர்வுமுறை இத்தனை கெடுபிடிகளுடன் நடைபெறுவது ஏற்புடையதாகுமா?
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுத வரவில்லை. நாற்பதாயிரம் மாணவர்கள் பள்ளிக்கே வருவதில்லை என்று செய்தி வந்து கொண்டுள்ளது. இவர்கள் எல்லாம் கொரோனா காலத்தில் கொரோனா களத்தில் All Pass திட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன? கல்வித்துறை இப்பிரச்சனையினை எப்படி சரி செய்யப் போகிறது? பொதுத்தேர்வு எழுத மூன்று நாட்கள் வந்தால் போதும் என தான் சொன்ன கருத்தினை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ‘பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்’ எனத் தெரிவித்துள்ளார்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தை கொண்டாடும் வகையில் ‘கற்றலைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் விளம்பரப்படுத்துவதற்கும், கலைநிகழ்ச்சிகள் வழியாக பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் வெற்றிகரமான திட்டம், மிகச் சிறப்பான திட்டம், இந்தியாவிலேயே இல்லாத திட்டம் என்று அரசு கூறிவரும் வேளையில் இதனை விளம்பரப்படுத்துவதற்கும் கொண்டாடுவதற்கும் இத்தனை விளம்பரங்கள் தேவையா? என்பதை சிந்திக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...