தமிழ்நாடு அரசின் வேண்டுகோள்படி, நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்திருந்த நிலையில்,
ஏசி வசதியுடன் கொச்சியில் தயாரிக்கப்பட்டு "சிரியாபாணி" என்ற பெயரிடப்பட்ட கப்பல், கடந்த 7-ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகம் வந்தது. 8 மற்றும் 9-ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. பிரதமர் திரு. நரேந்திர மோடி டெல்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
ஒன்றிய அரசு வழங்கிய நிதியுதவியுடன் நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது. குடியுரிமை பெறுவது, மருத்துவப் பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளைப் பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது எனப் பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று பயிற்சி பெற்றனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை சென்று வர 6 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுவதால் பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் 7600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, 60 நாட்டிக்கல் மைல் (கடல் மைல்) தூரத்தில்... அதாவது 110 கி.மீ. தூரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் அமைந்துள்ளதால் 3.30 மணி நேரத்தில் கப்பல் மூலம் இலங்கை சென்றடைய முடியும். இந்தக் கப்பலில் 150 பேர் பயணம் செய்ய முடியும். 14 பேரைக் கொண்ட சிப்பந்திகள் குழு உடன் செல்லும்.
இந்தக் கப்பல் போக்குவரத்து வரும் 23-ஆம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் வடகிழக்குப் பருவமழை காலம் என்பதால் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அந்தச் சேவை நிறுத்தப்பட்டு, மீண்டும் ஜனவரி மாதம் முதல், நாள்தோறும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரால் 1982-ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை கப்பல் சேவை நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...