ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.
ஆண்டுக்கு ஒருமுறை இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் முடிவுகளை அறியலாம்.
கடந்த 2024 ஜூன் 16 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வும் செப்டம்பர் மாதத்தில் முதன்மைத் தேர்வும் தொடர்ந்து 2025 ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் நேர்காணலும் நடைபெற்றது.
அதன்படி இன்று வெளியான இறுதி தரவரிசைப் பட்டியலில் மொத்தமாக 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் இரண்டாமிடமும் டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓபிசி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்த 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...