சோஹோ நிறுவனத்தின் பயிற்சி திட்டமான சோஹோ ஸ்கூல் ஆஃப் லேர்னிங் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் இரண்டு நகரங்களில் புதிய பயிற்சி பள்ளிகளை இந்த நிறுவனம் அமைத்திருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு பள்ளியும் நெல்லை மாவட்டம் தருவையில் ஒரு பள்ளியும் என இரண்டு இடங்களில் தன்னுடைய பயிற்சி பள்ளிகளை நிறுவி இருக்கிறது.
இந்த பயிற்சி பள்ளிகள் வாயிலாக சோஹோ நிறுவனம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கும் இளம் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சி வழங்க இருக்கிறது. கடந்த 2005ஆம் ஆண்டு சோஹோ ஸ்கூல்ஸ் ஆஃப் லேர்னிங் என்ற திட்டத்தை சோஹோ நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆறு மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொண்டு கல்லூரி படிப்புக்கு மாற்றாக நேரடியாக தொழில் பயிற்சி வழங்கக்கூடிய ஒரு பயிற்சி மையமாக இது செயல்பட தொடங்கியது.
சோஹோ ஸ்கூல்ஸ் ஆஃப் லேர்னிங் திட்டத்தின் படி பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டு காலம் இதில் இணைந்து கல்வி பயிலலாம். இவர்களுக்கு இந்த இரண்டு ஆண்டுகளில் ஓராண்டு காலம் சோஹோ நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் வாய்ப்பு கிடைக்கும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு நேரடி தொழில்நுட்ப பயிற்சியை வழங்கி அவர்களுக்கு இருக்கும் திறன் இடைவெளியை குறைக்கும் முயற்சிதான் இது என சோஹோ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் கிடையாது இது மட்டுமின்றி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் நிதி சார்ந்த கவலைகள் எதுவும் இல்லாமல் பயிற்சில் கவனம் செலுத்த முடியும். பயிற்சி முடித்தவுடன் வேலை வாய்ப்பு பெற முடியும் . இந்த திட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் 20 மாணவர்கள் மட்டுமே இதில் தேர்வு செய்யப்பட்டு படிக்க வைக்கப்படுகின்றனர்
இவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது சோஹோ நிறுவன ஊழியர்களாக இருக்கின்றனர். ஆறு மாணவர்களோடு ஒரு சோதனை முயற்சியாக தொடங்கப்பட்ட சோஹோ ஸ்கூல்ஸ் ஆஃப் லேர்னிங் தற்போது நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் விரும்பும் மாற்றுக் கல்வி வாய்ப்பாக உருவாகியிருக்கிறது என சோஹோ தொழில்நுட்ப இயக்குனரும் பயிற்சி பள்ளியின் தலைவருமான ராஜேந்திரன் தண்டபாணி தெரிவித்துள்ளார்.
தற்போது சென்னை மற்றும் தென்காசியில் பயிற்சி வளாகங்கள் செயல்படுகின்றன. பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் தருவையிலும் கும்பகோணத்திலும் புதிய பயிற்சி பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. தொடக்கத்தில் இங்கே 15 லிருந்து 20 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பள்ளியில் படிப்பை முடித்த பல்வேறு மாணவர்களும் தற்போது சோஹோ நிறுவனத்தில் தலைமை பொறுப்புகளில் இருப்பதாகவும் பல்வேறு புதிய புதிய ப்ராஜெக்ட்களை செயல்படுத்தி முடித்திருப்பதாகவும் ராஜேந்திரன் தண்டபாணி தெரிவித்துள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...