இதில், அரசுப்பள்ளிகளில் 48,40,034 பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 20,97,347 பேரும் என மொத்தம் 69,37,381 மாணவர்கள் இலவசக்கல்வியை பெற்று வருகிறார்கள். கல்விக்கட்டணத்தை செலுத்தமுடியாது என்றாலும் தரம் நன்றாக இருக்கும் என்பதற்காக கஷ்டப்பட்டாவது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் முன்பு சேர்த்து வந்தார்கள். ஆனால் இப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளாலும், அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ததாலும், அரசுப்பள்ளிகளில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் உதவித்தொகை கிடைப்பதாலும் அரசுப்பள்ளிகளை நோக்கி மாணவர்கள் அலை அலையாய் படையெடுக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் படித்த மாணவிகள் கல்லூரிப்படிப்பு உள்பட உயர்கல்வி படிக்கும்போது மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருவதால் இப்போது 4 லட்சத்து 6 ஆயிரம் மாணவிகள் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற்றுவருகிறார்கள். மாணவிகளுக்காக மட்டும் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டம், மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் என்ற பெயரில் விரிவுப்படுத்தப்பட்டது. அதன்படி, 3.80 லட்சம் மாணவர்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகிறார்கள்.
அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் இப்போது ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. இதுபோல நடுநிலைப்பள்ளிகளில் இப்போது உயர்நுட்ப ஆய்வகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பசியாற மதிய உணவோடு, இப்போது காலை உணவுத்திட்டமும் இருக்கிறது. கற்பித்தலிலும் அரசு பள்ளிகளில் உயர்ந்த நிலை இருக்கவேண்டும் என்ற சீரிய நோக்கில் செயல்படும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எந்த ஊருக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் அங்குள்ள அரசுப்பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவதையும், மாணவர்கள் புரிந்துக்கொள்வதையும் மிக உன்னிப்பாக கவனித்துவருகிறார்.
மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் கடந்த 22-ந்தேதி வரையிலான நிலவரப்படி, 1-ம் வகுப்பு தமிழ்வழிக்கல்வியில் 1,06,756 மாணவர்களும், ஆங்கிலவழிக்கல்வியில் 28,392 மாணவர்களும் என மொத்தம் 1,35,148 பேர் அரசு பள்ளிகளில் சேர்ந்திருக்கிறார்கள். 8-ம் வகுப்பு வரை மற்ற வகுப்புகளையும் சேர்த்தால் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 683 பேர் சேர்ந்திருக்கிறார்கள். கோடைவிடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் வரையும், திறந்தப்பிறகும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்பதால் இன்னும் அதிக மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுப்பள்ளிகளில் சேர மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பெருங்கூட்டமாய் வருவது மகிழ்ச்சி அளித்தாலும், அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப நல்ல தரத்திலான கல்வியை அளிக்கவேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பாகவும் இருக்கிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...