தமிழகத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1996 காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 10-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைந்தது.
விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ள விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பேரில் ஆன் லைன் விண்ணப்பத்தில் தேவையான திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 13 முதல் 16 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல விண்ணப்பதாரர்கள் தேர்வு மையம் மாற்றம், சான்றிதழ் விவரங்களில் குறிப்பிட்ட தவறான விவரங்களை சரிசெய்வது என தேவையான திருத்தங்களை செய்து கொண்டனர்.
இதற்கிடையே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 390 பேர் விண்ணப்பித்திருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த வகையில், 1996 காலியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 390 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு காலியிடத்துக்கு ஏறத்தாழ 112 பேர் மோதுகின்றனர். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 12-ம் தேதி நடைபெற உள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடத்தப்பட இருப்பதால் விண்ணப்பங்கள் அதிகமான அளவில் வந்துள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்திருக்கக் கூடும் என தெரிகிறது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று டிஆர்பி தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...