தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர் வருகை முதல் நலத் திட்டங்கள் விபரம் வரை 100க்கும் மேற்பட்ட புள்ளிவிபரங்களை 'எமிஸ்' தளத்தில் ஆசிரியர்கள் தினமும் பதிவேற்றம் செய்யும் நிலை இருந்தது. இதனால் கற்பித்தல் பணி பாதிப்பதாக ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தின.
இதையடுத்து ஓராண்டுக்கு முன் பெரும்பாலான எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. அதை ஈடுசெய்யும் வகையில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 'அட்மினிஸ்ட்ரேட்டிவ் இன்ஸ்ட்ரெக்டர்' (ஏ.ஐ.,) என்ற பெயரில் கணினி தெரிந்தவர்கள் 10 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்படுவர் என முடிவு செய்யப்பட்டு,
8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலா ரூ.10ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஒரு பள்ளியில் நியமிக்கப்பட்டாலும் அதன் அருகில் உள்ள 3 அல்லது 5 பள்ளிகளின் கணினிசார்ந்த பதிவேற்றப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
மதுரை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது அப்பணியில் இருந்தவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றமோ, வேறு பணிக்கோ சென்று விட்டனர். மேலும் நியமிக்கப்பட்ட பள்ளியை தவிர பொறுப்பு வழங்கிய கூடுதல் பள்ளிகளுக்கு அவர்கள் செல்வதில்லை. இதனால் அனைத்து பணிகளையும் மீண்டும் ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்ற அமைச்சர் மகேஷ் உத்தரவு, பெரும்பாலான மாவட்டங்களில் பின்பற்றப்படவில்லை. கூடுதலாக ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு ஏ.ஐ.,க்கள் செல்லுவதில்லை. இதனால் மீண்டும் ஆசிரியர்களுக்கு எமிஸ் பணிப்பளு அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு இல்லையெனில் மீண்டும் போராட்டம் நடத்துவோம்' என்றனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...