தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியமான திட்டம் குறித்து காண்போம்.
இல்லத்தின் மூளைகளாக மனைவிகள் செயல்பட்டால், குடும்பத்தின் இதயமாக செயல்படும் கணவன்மார்களின் இதயம் முக்கியமல்லவா?
உலகின் நம்பர் 1 கில்லர் - மாரடைப்பு
மாரடைப்பு ஏற்படுவதில் மெஜாரிட்டி - ஆண்கள்
இளம் கைம்பெண்கள் உருவாகாமல் தடுக்கவும், அவர்களின் இதயத்தைக் காக்கவும் கொண்டு வரப்பட்ட திட்டம்
"இதயம் காப்போம் திட்டம்"
இந்தத் திட்டத்தின் படி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் , துணை சுகாதார மையங்களிலும் மாரடைப்பு ஏற்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய "லோடிங் டோஸ்" மாத்திரைகள் வழங்கப்படுகின்றன .
முதலில் மாரடைப்பு எப்படி ஏற்படுகின்றன என்பது தெரிந்தால் மாரடைப்பில் லோடிங் டோஸ் எப்படி வேலை செய்கிறது என்பது புரியும்.
ரத்த நாளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சிஜனேற்றம் அடைந்த எல்டிஎல் படியத் துவங்கி "காரை" (PLAQUE) உருவாகிறது.
இந்தக் காரையானது திடீரென உடைந்து (PLAQUE RUPTURE) அந்த இடத்தில் ரத்த உறைதல் ஏற்பட்டு கட்டி ஏற்படுகிறது. இதனால் ரத்த நாள அடைப்பு ஏற்படுகிறது.
இந்த ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு ஒரு மணிநேரத்தில், அந்த ரத்த நாளத்தால் ஊட்டமளிக்கப்பட்ட இதயத்தின் தசைகள் முழுவதுமாக மரணிக்கும்.
எனவே, மாரடைப்பு ஏற்பட்ட முதல் ஒரு மணிநேரம் என்பது "கோல்டன் ஹவர்" எனப்படும்.
இந்த கோல்டன் ஹவருக்குள் மேல்சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று ரத்தக் கட்டியை கரைக்கும் சிகிச்சை/ ஸ்டென்ட் மூலம் ரத்த நாளத்தை விரிவுறச் செய்யும் சிகிச்சை ஆகியவற்றை செய்ய வேண்டும்.
இவ்வாறு மேல் சிகிச்சையை அடையும் நேரத்தில் இதயத்தின் தசைகளைக் காக்கவல்ல பணியை "லோடிங் டோஸ்" மாத்திரைகள் செய்கின்றன.
அவை பின்வருமாறு -
1. ஆஸ்பிரின் 325 மில்லிகிராம்
2. க்ளோபிடோக்ரெல் 300 மில்லிகிராம்
மேற்கூறிய இரண்டு மாத்திரைகளும்
ரத்த தட்டணுக்களின் செயல்திறனை பாதித்து ரத்த உறைதலைத் தடுத்து ரத்த கட்டிகள் ஏற்படாமல் தடுக்கிறது.
3. அடோர்வாஸ்டாட்டின் 80 மில்லிகிராம்
ரத்த நாள அடைப்பை ஏற்படுத்தும் காரை மேலும் நலிவடைந்து விடாமல் அதன் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். அதனால் மேற்கொண்டு காரை உடைப்பு ஏற்பட்டு ரத்த நாளத்தை அடைப்பது தடுக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் பலனை ஆய்வு செய்த போது, 2023-2024 வருடத்தில் நெஞ்சு வலி என்று ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ துணை சுகாதார நிலையத்துக்கோ வந்தவர்களுக்கு சராசரியாக 13.09 நிமிடங்களில் உடனடியாக லோடிங் டோஸ் மாத்திரைகள் வழங்கப்பட்டு சராசரியாக 46.25 நிமிடங்களுக்குள் ( கோல்டன் ஹவருக்குள்) மேல்சிகிச்சை செய்ய வேண்டிய இடத்துக்கு அனுப்பி முறையான சிகிச்சையைப் கிடைக்கச் செய்ததில் 97.7% பேர் மாரடைப்பு ஏற்பட்டும் உயிர்பிழைத்துள்ளனர்.
வெறும் 0.1% மட்டுமே மேல் சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.
2.2% மட்டுமே மேல் சிகிச்சை கிடைத்தும் இறந்துள்ளனர்.
நெஞ்சுவலி ஏற்பட்டு லோடிங் டோஸ் வழங்கப்பட்ட 6493 பேரில் 90% பேருக்கு மாரடைப்பு உண்மையிலேயே ஏற்பட்டது தெரியவந்துள்ளது. 647 (10%) பேருக்கு மட்டுமே அது வயிறு சார்ந்த உபாதை என்பது தெரியவந்தது.
இதில் இருந்து தெரிவது என்ன?
நெஞ்சு வலி ஏற்பட்டால் அது 90% மாரடைப்பாக இருக்கலாம். 10% மட்டுமே அது வயிறு சார்ந்த உபாதையாக இருக்கலாம். எனவே நெஞ்சு வலியை சாதாரணமாகக் கடந்து விடக்கூடாது.
மாரடைப்பு ஏற்பட்டவர்களுள் 97.7% பேர் லோடிங் டோஸ் உதவியால் மேல்சிகிச்சை தூரத்தை பாதுகாப்பாக அடைந்து உயிர் பிழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சத்தமில்லாமல் நடத்தப்பட்டிருக்கும் மிகப்பெரும் சாதனை.
உயிர் பிழைத்தவர்களில் 65% ஆண்கள்.
அதிலும் பெரும்பான்மை குடும்பமே இவர்களது வருமானத்தைச் சார்ந்திருக்கும் 40-55 வயதுடைய ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டாலும் உடனே லோடிங் டோஸ் மாத்திரை உட்கொண்டு அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 மூலம் விரைந்தால் உயிர்களைக் காக்க முடியும் என்பது புலனாகிறது.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...