Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜூலை 10! மோடி அரசின் பட்ஜெட் தாக்கல்... வருமான வரி சலுகை அறிவிப்பு வெளியாகுமா?

          பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர், அடுத்த மாதம், 7ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 14ம் தேதி வரை நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின், முதல் ரயில்வே பட்ஜெட், 8ம் தேதியும், 10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன.

        பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பின், புதிய எம்.பி.,க்களுக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக, இம்மாதம், 4ம் தேதி, பார்லிமென்ட் கூடி, 11ம் தேதி வரை நடைபெற்றது.மொத்தம், ஐந்து நாட்கள் நடைபெற்ற, இந்தக் கூட்டத் தொடரில், சபாநாயகர் தேர்தல் நடைபெற்றதோடு, இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். பின், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து, மூத்த எம்.பி.,க்கள் பேசியதும், பிரதமர் மோடி பதில் அளித்ததுடன், கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தது.

முழு அளவிலான...
இந்த ஆண்டு, லோக்சபா தேர்தல் நடைபெற்றதால், முழுமையான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. முந்தைய அரசு, இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்தது. அந்த இடைக்கால பட்ஜெட்டிற்கு, பிப்ரவரியில், பார்லிமென்டின் ஒப்புதல் பெறப்பட்டது. அந்த ஒப்புதலுக்கு, அடுத்த மாதம், 31ம் தேதி வரையே ஆயுள் உள்ளது. அதற்குள், முழு அளவிலான, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு, பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்க வேண்டும்.அதனால், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது கூட்டப்படும், புதிய அரசின் பொருளாதார கொள்கை, எந்த திசையில் செல்லப் போகிறது என்பதை நிர்ணயம் செய்யும், பொருளாதார ஆய்வறிக்கை எப்போது தாக்கலாகும்என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், பார்லிமென்ட் விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவையின் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. 

பொருளாதார ஆய்வறிக்கை
பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், வெங்கையா நாயுடுவின் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரை, ஜூலை, 7ம் தேதி கூட்டுவது என்றும், மறுநாளான, 8ம் தேதி, ரயில்வே பட்ஜெட்டையும், அதற்கு அடுத்த நாளான, 9ம் தேதி, புதிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையையும், 10ம் தேதி, மத்திய அரசின் பொது பட்ஜெட்டையும் தாக்கல் செய்வது என, தீர்மானிக்கப்பட்டது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து, அதிகாரபூர்வமாக, அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இந்த தேதிகளுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி, ஜனாதிபதிக்கு, முறைப்படி தெரிவிக்கப்படும். அதன் பிறகே, 
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.ஜூலை, 7 முதல், ஆகஸ்ட், 14ம் தேதி வரை, ஒரு மாதத்திற்கு மேலாக, நடைபெற உள்ள, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், 28 நாட்கள், இரு சபைகளும் கூடி, அலுவல்கள் நடைபெற உள்ளன. பட்ஜெட் நிறைவேற்றம் முடிந்ததும், வேறு பல முக்கிய அலுவல்களும், இந்த கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஒப்புதல் பெறப்படும்
அதாவது, சில அவசர சட்டங்கள் ஏற்கனவே அமலில் உள்ளன. அவற்றின் ஆயுட்காலம், ஜூலை மூன்றாவது வாரத்துடன் முடிவடைகிறது. அதற்கு முன், இவை அனைத்திற்கும், பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கி, சட்டங்களாக மாற்றப்படும். இது தவிர, போலாவரம் திட்ட மசோதா, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறை சட்ட மசோதா போன்றவற்றுக்கும், ஒப்புதல் பெறப்படும்.இது மட்டுமின்றி, லோக்சபா துணை சபாநாயகர் தேர்தலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நடைபெறும். அத்துடன், காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பையும், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வெளியிடுவார்.

புதிய அரசிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
*வருமானத்திற்கான குறைந்தபட்ச வரி விலக்கில் (தற்போது 2 லட்சம் ரூபாய்) மாற்றம்.
*சேமிப்பை அதிகரிக்க, 80சி பிரிவின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைக்கான வரம்பை உயர்த்த வேண்டும். 
*தொழில் முதலீடுகளுக்கு சிறப்பு சலுகைககள், குறிப்பாக, சொத்து மதிப்பு விரைவாக சரிய வாய்ப்புள்ள தொழில்களுக்கு சலுகை வழங்க வேண்டும்.
*மத்திய அரசின் நேரடி ஊக்குவிப்பு திட்டங்களில் சிலவற்றை நீக்கி, அவற்றை மாநில அரசுகளின் பொறுப்பில்விடலாம். இதனால், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும்.
*பங்குச் சந்தை நன்கு இருப்பதால், சிதம்பரம் அறிவித்த பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை இலக்கை விட, கூடுதலாக நிர்ணயிக்கலாம்.
*மறைமுக வரிகளில், குறிப்பாக, உற்பத்தி மற்றும் சுங்க வரிகளில் சில மாற்றங்கள் செய்யலாம்.
*சரக்கு மற்றும் சேவைகள் வரி அமலாக்கத்தை, வரும், 2015 மத்தியில் அல்லது, 2016 ஏப்ரலில் அமலாக்க, புதிய காலக்கெடு விதிக்கலாம்.
*வரும், 2015, ஏப்ரல் 1ம் தேதி முதல், நேரடி வரிகள் விதிமுறை அமல் குறித்து அறிவிக்கலாம்.
*கல்வி, திறன் வளர்ப்பு, ஆரோக்கியம் மற்றும் நகர்ப்புற திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு, கழிப்பறை, வீடு, சாலைகள், சிறப்பு உற்பத்தி 
மண்டலங்கள் என, பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களுக்கு துவக்க ஒதுக்கீடுகளையும் செய்யலாம்.
*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், நிலச் சட்டங்கள் ஆகியவற்றை மேலும் சீர்படுத்தி, வளர்ச்சி மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive