Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரும் கல்வி ஆண்டிலிருந்து இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்பு

          பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

             உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் இந்தப் புதிய வழிகாட்டுதல் கொண்டு வரப்பட்டுள்ளது; எனவே, எவ்விதமான தடைகள் வந்தாலும் புதிய வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் - கல்வி-ஆராய்ச்சிக்கும் அதனால் சமூகத்தில் ஏற்படக் கூடிய தாக்கத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இடையே அறிவு பறிமாற்ற கூட்டுறவை ஏற்படுத்துதல் - என்ற தலைப்பிலான மூன்று நாள் சர்வேதச மாநாடு தொடக்க விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சந்தோஷ் பாண்டா பேசியது:

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) என்.சி.டி.இ. கொண்டுவந்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

வருகிற ஜூலை மாதம் முதல் இந்த புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த வழிகாட்டுதலின் படி பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

இதற்கு தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வருகிற ஜூலை முதல் புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

ஒருவேளை இதற்கு எதிராக தீர்ப்புகள் வருமானால், அதை எதிர்த்து என்.சி.டி.இ. போராடும் என்றார்.

யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ்: நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆசிரியரின் பங்கு மிகப் பெரியது. இதை உணர்ந்துதான் ஆசிரியர் கல்வியை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

திறன் மிக்க 1000 ஆசிரியர்களை உருவாக்கி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடியில் இரண்டு ஆசிரியர் கல்வி மையங்கள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.

காக்கிநாடாவிலும், வாராணசியிலும் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 220 ஆசிரியர்களுக்கு பயிற்சிளிக்கப்பட்டு, பல்வேறு பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக தொழில்நுட்பம் அபார வளர்ச்சி பெற்று வருகிறது. யுஜிசி அண்மையில் இரண்டு இணைய பாடத் தொகுப்புத் திட்டங்களை அறிமுகம் செய்தது.

அதாவது அனைத்து 77 இளநிலை படிப்புகள், அனைத்து முதுநிலை பட்டப் படிப்புகளின் பாடங்களும் யுஜிசி இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இதை இலவசமாக மாணவர்கள் பயன்படுத்த முடியும்.

இதுபோல, பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இதனால் ஆசிரியரே தேவையில்லை என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

இருந்தபோதும், நேரடியாக கற்பித்தலை வழங்குவதும், குறிப்பிட்ட பாடத்துக்கு தொடர்புடைய பிற கருத்துகளை தெளிவுபடுத்தியும், சந்தேகங்களுக்கு நேரடி பதிலளிக்கவும் ஓர் ஆசிரியரால் மட்டுமே முடியும்.

எனவே, ஆசிரியர்கள் கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதோடு, ஒரு பாடத் துறையோடு நின்று விடாமல் பல்வேறு துறை அறிவையும் பெற்றிருப்பது அவசியம் என்றார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் வரவேற்புரை ஆற்றினார். தமிழக உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா, தென்னாப்பிரிக்க வடமேற்கு பல்கலைக்கழக பேராசிரியர் சி.சி.வோல்ஹூட்டர், அமெரிக்காவின் பிரிட்ஜ்வாட்டர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜோன்னே நியூ கோம், அமெரிக்காவின்

சின்சினாட்டி பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி இணை முதல்வர் பியூஷ் சுவாமி உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive