Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வியால் சிறைபடாத மாணவச் செல்வங்கள்-முனைவர்.கெ.செல்லத்தாய்

       இன்றைய கல்வி என்பது கடைத் தெருவில் விற்கும் கத்தரிக்காய் ஆகிவிட்டது. கர்ப்பகிரகத்தில் இருக்கும் கடவுளை வணங்கலாமே தவிர, விற்பனை செய்யக் கூடாது. கேடில்லாத விழுச் செல்வம் கல்வி. இம்மைப் பயன்தருவது, அறியாமையை அறவே ஒழிக்கும்அற்புத மருந்து. கொடுக்கக் கொடுக்க குறையாது
 
              அட்சயப் பாத்திரத்தில் இருந்து வரும் அமிழ்தம் போன்றது. இத்தகு அருமைமிகு கல்வியை 'கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என்றார் ஒளவை.

'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்' என்றும், 'காலை எழுந்தவுடன் படிப்பு' என நம் ஆன்றோர்கள் கல்வியின் சிறப்பை நமக்கு அறிவுறுத்தி உள்ளனர்.ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தைகளில் மூத்தோனை வருக எனத்தாய் அழைக்காது, தான் பெற்ற பிள்ளைகளிலும் கல்வி கற்றவனையே முதலில் அழைப்பாள் என்றும், பிறப்பால் கீழ் நிலையில் உள்ளோர் கல்வி கற்றவராய் இருப்பினும் மேல் நிலையில் உள்ளோர் அவர்களின் கீழ் தான் கல்வி கற்க வேண்டும் என புறநானூறு கூறுகிறது.
இது போல் கல்வியின் அவசியத்தைக் கூறாத நுால்களே இல்லை. எளிதில் யாரும் திருட முடியாத தித்திக்கும் தேனமுதான கல்வியை கற்போன், சமுதாயத்தால் மதிக்கப்படுகிறான். ஒருவனை அறிவாலும், புகழாலும் வாழும் வரை பெருமை அடையச் செய்வது கல்வியே. கையில் உள்ள பொருட் செல்வத்தை விட நிரந்தரமான உண்மைச் செல்வம் கல்வி. மக்களுக்குப் பயன்படாத கல்வியை 'அற்பக் கல்வி', 'மண்படுகல்வி', 'பேடிக் கல்வி' என்று பாரதி பழிக்கின்றார்.
''வீதிதோறும் இரண்டொரு பள்ளிநாடு முற்றிலும் உள்ளனவூர்கள்நகர்களெங்கும் பலபல பள்ளி'' என்று பாரதியின் கனவு நனவானாலும் இன்று நம் கல்வியின் நிலையென்ன?
படித்தவர்கள் முன்மாதிரி ''தரித்திரம் போகுது; செல்வம் வருகுது; படிப்பு வளருது; பாவம் தொலையும், படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான் ஐயோவென்று போவான்'' எனப் பாரதி உறுதிபடக் கூறினார். படித்தவர்கள் உயர்ந்த குணமுடையவர்களாக மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.ஆனால் இன்று, கல்வி கற்ற உயரதிகாரிகள் கையூட்டு செய்வதில் கைதேர்ந்து விட்டனர். லஞ்சம் பெறுவதையே லட்சியமாகக் கொண்டனர். பாரதி சொன்னதையெல்லாம் நினைத்தால் நமக்கு சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை.
கலைமகள் தந்த கல்விக் கனியை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை போல ஆளாளுக்கு கடை விரித்து விட்டனர். ஓர் ஊருக்கு ஒன்பது கல்வி நிறுவனங்கள் இருந்தால் ஒன்று கூட உருப்படாமல் போய்விடும். தரமான கல்வி வேண்டுமா? தனியாரில் படிக்கலாம் என்ற நிலை மக்களிடம் உருவாகிவிட்டது. வேலை பார்க்க மட்டும் அரசு தேவை. வீட்டுல வச்சா செல்வம் திருடு போயிடும், என்று மக்கள் கொண்டு போய் கொட்டுகின்றனர் கல்விச் சாலைகளில். பரம்பரைச் சொத்தை வித்து பள்ளிக்குப் பணம் கட்டு; காடுகரை எல்லாம் வித்து கல்லுாரிக்குப் பணம் கட்டு என்ற நிலை தான் இன்று.
ஆனால் படிச்ச பிறகு சம்பாதிக்கலாம், மீண்டும் அடுத்த தலைமுறை படிப்புக்கு விற்கலாம் என்ற கனவெல்லாம் காற்றோடு போய்விட்டது. படித்தவனுக்கு மாதம் பத்தாயிரம் சம்பளம் என்றால்; படிக்காமலே புரோட்டா போடுபவருக்கு மாதம் ரூ.30,000 சம்பளம்.
தரம் என்னானது இன்று நம் கல்வியின் தரம் என்ன? 'கல்வி நல்காக் கசடர்க்குத் துாக்கு மரம்' என்று பாரதிதாசன் கூறுகின்றார். 'நீ மட்டும் உயர்ந்தால் போதாது உன் உயரத்திற்கு கல்லாதவர்களையும் இலவசக் கல்வி மூலம் உயர்த்து. அது உண்மையான கல்வி' என்றார் பாரதி.
மலரைத் தேடித் தானாகத் தேனீக்கள் வரும். நல்ல கல்வியைத் தேடித் தானாக மக்கள் செல்வர். ஆனால் அங்கே திருமகள் தீராத விளையாட்டல்லவா விளையாடிக் கொண்டிருக்கின்றாள். பணம் இருந்தால் பக்கத்துக்கு வா என்ற நிலை. குருவிக்குத் தக்கபடி கொண்டை இருக்கணும்,
ஆளுக்குத்தக்கபடி அறிவு இருக்கணும், காசுக்குத்தக்கபடி தான் நாங்க கல்வி கொடுப்போம் என்ற நிலையில், ஏழைக்கு கல்வி எட்டாக் கனியாகிப் போய்விட்டது. அப்படியும் பணம் கொடுத்தாலும் சிறந்த கல்வி கிடைக்கிறதா?
பெற்றோர்களும் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தர வேண்டும் என ஆசைப்படுகின்றனர். கல்வியைக் கொடுக்கும் நாம், கஷ்டம் வந்தால் அதைச் சமாளிக்கும் வழிமுறைகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோமா?
அறிவுத்திறனை எடை போடுமளவிற்கு ஆளுமை திறன் என்ன என்று பார்த்தோமா? ஊட்டி வளர்க்கின்ற நாம் உழைப்பின் மகத்துவத்தைத் தந்தோமா? நாம் படும்
கஷ்டங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோமா? அவர்களை பெட்டில் படுக்க வைத்து, நெட்டில் விளையாட விட்டு ரசிக்கின்றோம். செல்லுலாய்டு பொம்மையாக்கி வைத்துள்ளோம்,
பட்டனைத் தட்டினால் எல்லாமே கிடைக்கும் என்ற மாய வலைக்குள் மாட்டி வைத்திருக்கின்றோம். மன தைரியம் நீதியைச் சொல்லிக் கொடுக்கும் நீதி போதனை வகுப்பில்லை. ஆரோக்கியத்தைத் தரும் விளையாட்டு அவர்களுக்கில்லை. உறுதியான எண்ணெங்களை உருவாக்கும் மன தைரியமில்லை. நல்ல கல்வி தருகிறோம் என்று, கிள்ளிப் போட வேண்டிய விஷயங்களைத் தான் அவர்களுக்கு அள்ளி கொடுக்கின்றோம்.
கிடைத்தற்கரிய பெரும் பிறவி மனிதப் பிறவி. அதில் கல்வி கற்பது என்பது கடவுளைக் காண்பதைப் போல. அந்தக் கல்வி சிறந்த முறையில் நேர்மையான தகுதியின் அடிப்படையில் கிடைத்தால் அதைவிட இவ்வுலகில் கிடைத்தற்கரிய பெரும் பொக்கிஷம் வேறு ஒன்றுமில்லை.சிந்திப்பீர் பெற்றோர்களே! செயல்படுவீர் கல்வியாளர்களே! கல்வியால் சிறைபடாத மாணவச் செல்வங்களை உருவாக்குவோம்.
முனைவர்.கெ.செல்லத்தாய்
தலைவர், தமிழ்த்துறை
எஸ்.பி.கே. கல்லூரி,
அருப்புக்கோட்டை.
Sellathai03@gmail.com. 94420 61060




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive