Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப்பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் IAS அதிகாரி

     சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.
     ‘தனது மகள் கல்வியில் சிறந்த நிலையை நிச்சயம் அடைவாள்’, என்று உறுதியுடன் அவர் கூறுகிறார்.


         “அரசுப் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் சேர்க்கக்கூடாது?”, என்று சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பினார். இந்தநிலையில் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

         அவரது பெயர் லலிதா, பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை கமிஷனர் பதவி வகிப்பவர். கல்வித்துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இவரது ஒரே மகள் தருணிகா. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான லலிதா தனது மகள் தருணிகாவை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் நேற்று சேர்த்தார்.
பொதுவாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. பெரிய டாக்டராகவோ, என்ஜினீயராகவோ, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ ஆக்கி பார்க்கவேண்டும் என்ற ஆசையில் நகரில் உள்ள பெரிய பள்ளிகள் சேர்ப்பார்கள்.
ஆனால் அரசு அதிகாரியாக இருந்தபோதிலும் எப்படி தன் மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் உதித்தது? என்பது குறித்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
‘ஏதாவது மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், நீ அதை உண்டாக்கி காட்டு’, என்ற பழமொழி உண்டு. என்னை பொறுத்தவரை சமுதாயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். அதை நான் பின்பற்றியிருப்பதாலேயே எனது மகளை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து இருக்கிறேன். இதுதான் எனது ஆசையாகவும் இருந்தது.
மாநகராட்சி பள்ளிகள் தற்போது நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. தகுதியான, திறமையான ஆசிரியர்கள் இங்கு உள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தரம் வாய்ந்ததாகவே மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இன்றைய தினம் என் பிள்ளையை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து இருக்கிறேன். அவள் நிச்சயம் இங்கு கல்வி கற்று சிறந்த நிலையை அடைவாள் என்பதில் உயரிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை பின்பற்றி மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கவேண்டும். மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயரவேண்டும் என்பது தான் என் விருப்பம்.
சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை துணை கமிஷனராக கடந்த 2013 முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றி இருக்கிறேன். அப்போதே ‘என் வயிற்றில் வளரும் குழந்தையை நிச்சயம் மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும்’, என்று நினைத்தேன். இப்போது மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை கமிஷனராக இருக்கும்போதே நினைத்ததை செயல்படுத்தி உள்ளேன்.
எனது கணவர் சுமந்த் மற்றும் எனது பெற்றோர் ராஜேந்திரன்-தமிழரசி ஆகியோர் நான் எடுத்த முடிவு சரிதான் என்று அதனை வரவேற்று, எல்லா விதத்திலும் ஊக்கம் அளித்தனர். எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா பெருமிதத்துடன் கூறினார்.
தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் நடந்துவருகின்றன. அரசு ஊழியர்கள்கூட தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதில்லை. அரசு ஊழியர்கள், குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பது கட்டாயமாக்கப்படுமா என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்ட கேள்விக்கு, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துவருதால் அரசு ஊழியர்களே தாமே முன்வந்து பள்ளியில் சேர்ப்பார்கள் என்று பதிலளித்தார். 



இந்தச்சூழ்நிலையில் சென்னை மாநகராட்சியில் துணைக் ஆணையாளராகப் பணியாற்றும் லலிதா ஐ.ஏ.எஸ், தன்னுடைய இரண்டரை வயது மகள் தருணிகாவை கோடம்பாக்கம், புலியூர் மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்து அரசு ஊழியர்கள் மத்தியில் முன்மாதிரியாகத் திகழ்கிறார். 
இதுகுறித்து லலிதாவிடம் பேசினோம். ''நான், கடந்த 2014ல் சென்னை மாநகராட்சி கல்வித்துறையில் துணைக் ஆணையாளராகப் பணியாற்றினேன். தற்போது, வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையாளராகப் பணியாற்றுகிறேன். கல்வித்துறை துணைக் கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துவருகிறேன். என்னுடைய கணவர் சுமந்த் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் குழந்தையை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்ததை வரவேற்றுள்ளனர். 
பொதுவாக, மாநகராட்சிப் பள்ளி, அரசுப் பள்ளி என்றாலே பெற்றோர்களுக்கு ஒருவித தயக்கம் இருக்கிறது. இந்தப்பள்ளிகளில் சுகாதாரம், கல்வித்தரம் உள்ளிட்டவைகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இருக்காது என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. மாநகராட்சி, அரசுப் பள்ளிகளின் இடவசதி, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இல்லை. மேலும், மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில்கூட தரமான கல்வியை ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றனர்'' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 
உங்களுடைய குழந்தையை மாநகராட்சிப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?
''மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைகள் நட்பாக குழந்தைகளிடம் பழகுகின்றனர். அதோடு சிறப்பாகக் கல்வியையும் கற்றுக் கொடுக்கின்றனர். இதுவே மாநகராட்சிப் பள்ளியில் குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய ஆசையை கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்''. 
தருணிகா ஸ்கூலில் எப்படி இருக்கிறார்?
''அவர் சமத்துக்குட்டி. எல்லோரிடமும் நன்றாகப் பழகுகிறார். அவருக்கு நிறைய ப்ரண்ட்ஸ் கிடைத்திருக்கிறார்கள். நன்றாகவும் படிக்கிறார்''. 
மாநகராட்சிப் பள்ளி எப்படி உள்ளது?
 ''மாநகராட்சிப் பள்ளிகளில் எல்லா வசதிகளும் உள்ளன. தனியார் பள்ளிகளைவிட சிறப்பாகவே மாநகராட்சிப் பள்ளிகள் செயல்படுகின்றன. அதை மக்கள் உணர வேண்டும். அரை நாள் மட்டுமே  தருணிகாவுக்கு ஸ்கூல்''. 
உங்களைப் போல வேறு யாராவது மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துள்ளார்களா?
''அது, எனக்குத் தெரியவில்லை''. 
உங்கள் குழந்தை என்பதால் சிறப்பான கவனிப்பு பள்ளியில் இருக்கிறதா? 
 ''அப்படி எதுவுமில்லை''. 
கோடம்பாக்கம் பள்ளியை எப்படி தேர்வு செய்தீர்கள்?
''மாநகராட்சிப் பள்ளிகள் அனைத்தும் சிறப்பாகவே செயல்படுகின்றன. அந்த வரிசையில்தான் கோடம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தேன். மாண்டிச்சோரி முறையில் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகின்றன. ஸ்நாக்ஸ்கூட கொடுக்கப்படுகிறது. வீட்டிலிருந்து கொடுக்கும் ஸ்நாக்ஸைவிட பள்ளியிலிருந்து கொடுக்கப்படும் ஸ்நாக்ஸை விரும்பிச் சாப்பிடுகிறார் தருணிகா. ஸ்கூலில் கட்டணம் கிடையாது. யூனிபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது''. 
வீட்டில் தருணிகா எப்படி?
''அவருக்கு இரண்டு வயது எட்டுமாதங்களாகுகிறது. அவர் படுசுட்டி. நான், தருணிகாவை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்ததற்கு என்னுடைய கணவரும், குடும்பத்தினரே காரணம்''. 
ஸ்கூலுக்கு செல்லும்போது அவர் அழுதாரா?
''நேற்று தான் (17-ம் தேதி) அவர் ஸ்கூலுக்குச் சென்றார். அவர், அழாதது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. நான்தான் ஸ்கூலுக்கு அழைத்துச் சென்றேன். என்னை அங்குள்ள யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ஸ்கூல் முடிந்து சந்தோஷமாக வீட்டுக்கு வந்தார். அவரது சந்தோஷம்தானே நமக்கு முக்கியம்''.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive