Total Pageviews

Sugar உள்ளவர்கள் என்னென்ன சாப்பிட்டால் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்?

இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத நிலையில் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும்விதத்தில் உடலால் பயன்படுத்த முடியாத நிலைதான் சர்க்கரைநோய் எனப்படுகிறது.
     இந்தப் பிரச்னைக்கு ஆளானவர்களின் ரத்தத்தில் அதிகளவு சர்க்கரை இருக்கும். ஆனால், இது ஒரு நோயல்ல. குறைபாடு. இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் ஏற்படும் ஒரு நிலை. மனித உடலில் சேரும் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற, இன்சுலின் மிக அவசியம். குறிப்பாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். ரத்தக்குழாய் சுவர்களில் கொழுப்புகள் படிந்து, காலப்போக்கில் அடைபட்டுவிடும். மேலும் இதயத் தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு சேர்க்கும் நரம்புகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக்கூடிய ஆபத்தை சர்க்கரைநோய் அதிகரிக்கும். ரத்தத்தில் அதிகளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (Polydipsia), அதிகப் பசி (Polyphagia) ஆகிய அறிகுறிகளை உருவாக்கும்.


ஒருவருக்கு சர்க்கரைநோயின் ஆரம்பநிலையில் உணவுப் பழக்கத்தில் மாற்றம், உடலுழைப்பில் ஈடுபடுத்துதல், சில மருந்துகளை உட்கொள்ளச் சொல்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். நமக்கு நன்கு அறிமுகமான சில காய்கள், பழங்கள், கீரைகளை உணவில் சேர்த்துவந்தாலும் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும். அவற்றில் சில...

* நெல்லிக்காய், பாகற்காய் சேர்ந்த ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்கும். பெரிய நெல்லிக்காய் ஒன்றுடன் அதைவிட அளவில் இரண்டு மடங்கு பெரிய பாகற்காயைச் சேர்த்து அரைத்து, சாறாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

* புதிதாக பூத்த ஆவாரம்பூவை 100 கிராம் எடுத்து, அதனுடன் 150 மி.லி தண்ணீர் சேர்த்து, அது 100 மி.லியாக வற்றும் வரை கொதிக்கவைக்க வேண்டும். இதற்கிடையே ஐந்து நெல்லிக்காய்களை எடுத்து, அவற்றின் விதைகளை நீக்கி (சிறிது நீர் சேர்த்து), 50 மி.லி அளவுக்குச் சாறு எடுத்து அதனுடன் ஆவாரம்பூ கொதிநீர் 50 மி.லி-யைச் சேர்த்து, அதனுடன் சிறிது தேன் கலந்து குடிக்க வேண்டும். இது கணையத்தைச் சீராக்கி, இன்சுலின் சுரப்பையும் சீராக்கும்.

* மாவிலைக் கொழுந்துடன் துவரம் பருப்பு சேர்த்து, வேகவைத்துச் சாப்பிட்டு வந்தாலும், சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும்.

* அறுகம்புல், வெந்தயம், கீரைகள், கீழாநெல்லி, கொய்யாப்பழம், வேப்பம்பூ போன்றவற்றை ஏதாவது ஒருவகையில் தனித்தனியாக உண்ணலாம். வேப்பம்பூவை ரசம் செய்தும், வெந்தயத்தை தோசையில் சேர்த்தும் சாப்பிடலாம். வாழைப்பூவை பொரியல், கூட்டு, வடை செய்து சாப்பிடலாம். ஆவாரம்பூவை பாலில் வேகவைத்து மாலை நேரப் பானமாக அருந்தலாம். ஆவாரம்பூவை கூட்டு, பொரியல் செய்யலாம். பாகற்காயை ஜூஸ், பொரியல், குழம்பு செய்து சாப்பிட்டுவரலாம்.

* இளநீர், கொத்தமல்லிக்கீரை, கோவைக்காய், கோவைப்பழம், பப்பாளிப்பழம் ஒவ்வொன்றையும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது சர்க்கரைநோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு நல்லது.

* புழுங்கலரிசி, கத்திரிப்பிஞ்சு, புடலம்பிஞ்சு, அவரைப்பிஞ்சு, வாழைத்தண்டு, பாசிப் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு, கடுகு, கசகசா, வெங்காயம், மணத்தக்காளி, சுண்டைவற்றல், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், நல்லெண்ணெய், இஞ்சி, சுக்கு, நாவல், மாதுளை, எலுமிச்சை, நாட்டுச்சர்க்கரை, தேன், மோர், கேழ்வரகு, கோதுமை உணவுகள், கறிவேப்பிலை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

* அரிசிச்சோறு, கோதுமை உணவு என எதுவாக இருந்தாலும் அளவோடு உண்பது நல்லது. பசி எடுத்தால் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதேபோல் தாகம் ஏற்பட்டால் மோர், ஜூஸ் என எதையாவது அருந்த வேண்டும். நெல்லிக்காய் சாற்றில் ஆவாரம்பூ, கறிவேப்பிலை சேர்த்துச் சாப்பிடலாம். தாகம் தணிக்க நீர் மோர், நெல்லிக்காய் கலவை நல்லது. முட்டைக்கோஸ் பொரியல், சூப் சிறந்தது.

* சர்க்கரைநோயால் கட்டான உடலை இழந்து, மெலிந்து, சக்கையைப்போல ஆனவர்கள் மறுபடியும் சீரான தேகத்தைப் பெற மூங்கிலரிசி உதவும். மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் பாயசமாகவும் செய்து சாப்பிடலாம். மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து, அரைத்துத் தூளாக்கி, அதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து கஞ்சிபோலக் காய்ச்சி சாப்பிட்டுவந்தால் உடல் உறுதிபெறும். சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும்.

* ஏரி, குளம், கிணறு, ஆறு போன்ற நீர்நிலைகளில் நீச்சலடித்துக் குளிப்பது, சைக்கிள் ஓட்டுவது, உடலுழைப்பு செய்வது போன்றவை சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கும். இவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், சர்க்கரை நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிக்க முடியும்.

* அதே நேரத்தில் சர்க்கரை நோயாளிகள் சில உணவுகளைக் கட்டாயம் தவிர்ப்பது நல்லது. கடலைப் பருப்பு, வேர்க்கடலை, காராமணி, வாழைக்காய், பலாக்கொட்டை, மொச்சைக்கொட்டை, உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, பச்சரிசி, ஆட்டுக்கறி உள்ளிட்ட மாமிச வகைகள், பரங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், பழரசங்கள், குளிர்பானங்கள், தயிர், தக்காளி, சர்க்கரை, எண்ணெய் அதிகமுள்ள பஜ்ஜி, போண்டா, மசால் வடை போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும். குறிப்பாக, சாப்பாட்டில் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மீன் உணவு சாப்பிடலாம். உடல் எடையை அதிகரிக்கச்செய்யும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மூன்று வேளையும் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற கட்டாயத்துக்காகச் சாப்பிடக் கூடாது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமாக வாழலாம் என்பதற்கு கடலூர் பேராசிரியர் ஓர் உதாரணம்!

கடலூரைச்சேர்ந்த முன்னாள் பேராசிரியரும், சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவருமான எட்வர்ட் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இவருக்கும் சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளது. இந்தநிலையில் வாழைப்பழம் சாப்பிடவே கூடாது என்பது

மருத்துவர்களின் பொதுவான கருத்து. ஆனால், எட்வர்டோ பல் துலக்கியதும் காலை 6 மணி அளவில் சில வாழைப்பழங்களைச் சாப்பிடுவார். சுமார் 9 மணி அளவில் காலை உணவை உண்பார். இதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். ஆனாலும், இவருக்கு சர்க்கரையின் அளவு உயர்வதில்லை என்கிறார். அதாவது, ``140, 150 என்ற அளவைத் தாண்டுவதில்லை’’ என்கிறார். அதே நேரத்தில் காலை உணவையும் வாழைப்பழத்தையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் சர்க்கரை அளவு நிச்சயம் கூடும் என்கிறார். மேலும், பலாப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆகாது என்பதையும் இவர் உடைத்தெறிந்திருக்கிறார். அவர் பலாப்பழச் சுளைகளைச் சாப்பிட்ட பிறகு அதன் கொட்டையைச் (விதை) சாப்பிட்டு விடுவாராம். அதேபோல், மாம்பழத்தை அதன் தோலுடன் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார். வாரத்தில் ஒருநாள் ஆட்டிறைச்சி சாப்பிடும் இவர், மீன்குழம்பை அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார். ``எதையும் அளவுடன் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்கிறார் நம்பிக்கையுடன்!
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive