சொத்து கணக்குடன் வருவாய்க்கான ஆதாரத்தையும் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ‘லோக் பிரஹாரி’ என்ற தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து கணக்குகளை ஆய்வு செய்ததில், 26 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 257 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்து இருப்பதாக வருமான வரித்துறையும், மத்திய நேரடி வரிகள் வாரியமும் தெரிவித்துள்ளன. மேலும், 9 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 42 எம்.எல்.ஏ.க்களின் சொத்து கணக்கை ஆய்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

தகுதி இழப்பு

சொத்து கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறியபோதிலும், வருவாய்க்கான ஆதாரத்தை தெரிவிப்பதை கட்டாயம் ஆக்கவில்லை.

ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நேரடியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ வர்த்தக தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது அரசு ஒப்பந்தம் பெற்றிருந்தாலோ அத்தகைய வேட்பாளர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள் என்று முன்பு இருந்த 7டி பிரிவில் கூறப்பட்டு இருந்தது. அந்த பிரிவை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும். மேலும், அத்தகைய வர்த்தக தொடர்பு வைத்திருப்பவர்கள், அதை தங்களது பிரமாண பத்திரத்தில் தெரிவிக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

வருவாய் ஆதாரம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது சொத்து கணக்குடன், தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துகளை வாங்கியதற்கான வருவாய் எப்படி வந்தது? என்பதையும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதன்மூலம், அந்த சொத்துகள் சட்டரீதியாக வாங்கப்பட்டதா? இல்லையா? என்பதை வாக்காளர்களே தெரிந்து கொள்ள முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Share this